சரக்கு ரெயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. மோசம் அடைகிறது காற்றின் தரம் - மக்கள் அச்சம்


சரக்கு ரெயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. மோசம் அடைகிறது காற்றின் தரம் - மக்கள் அச்சம்
x
தினத்தந்தி 13 July 2025 9:26 AM IST (Updated: 13 July 2025 12:48 PM IST)
t-max-icont-min-icon

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெறுவதாக ஆய்வுக்குப் பின் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை திருவள்ளூர் அருகே எரிபொருள் ஏற்றி சென்ற சரக்கு ரெயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக கொழுந்துவிட்டு எரியும் தீயால் அப்பகுதி முழுவதுமே கரும் புகை மண்டலம் போல காட்சியளித்து வருகிறது. ரெயிலில் எரிபொருட்கள் இருப்பதால் தீ மேலும் பரவும் என அஞ்சப்படுகிறது.

தீ விபத்து காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து கர்நாடகா மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதன்படி சென்னை சென்டிரலில் இருந்து கர்நாடகா மற்றும் கோவை மார்க்கத்தில் செல்லும் ரெயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளன.

மங்களூருவில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வர வேண்டிய ரெயில் திருவள்ளூரில் நிறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி விரைவு ரெயில் அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரியில் இருந்து சென்னை வரும் புளூமவுண்டன் எக்ஸ்பிரஸ் திருவாலங்காட்டில் நிறுத்தப்பட்டுள்ளது.

காலை 7 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையம் வரவேண்டிய கோவை சேரன் அதிவிரைவு ரெயில் அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் 300 மீ தூரத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பிடித்து எரியும் 5 பெட்டிகளை தவிர மற்ற பெட்டிகள் அகற்றப்பட்டு திருவள்ளூருக்கு கொண்டு செல்லப்பட்டன.

மொத்தம் 3 வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

தீ விபத்து காரணமாக சென்னை சென்டிரல் - அரக்கோணம் இடையே ரெயில் சேவை முடங்கி உள்ளது.

ரெயில் சேவை பாதிப்பால் திருவள்ளூரிலிருந்து சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அரக்கோணம் மார்க்கமாக சென்னை சென்டிரல் நோக்கி வரும் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூருக்கு 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளது. ஆய்வாளர் கோபி தலைமையில் 60 பேர் கொண்ட 2 குழுக்கள் விபத்துக்குள்ளான பகுதிக்கு விரைந்துள்ளனர்.

இந்நிலையில் சரக்கு ரெயில் தீப்பற்றி எரியும் நிலையில் சென்னை சென்டிரலில் 8 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

* சென்னை சென்ட்ரலில் இருந்து காலையில் கோவைக்கு புறப்பட வேண்டிய இன்டர்சிட்டி, சதாப்தி ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* சென்னை - சென்ட்ரல் மைசூரு இடையே காலையில் இயக்கப்படும் வந்தேபாரத் மற்றும் சதாப்தி ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* சென்னை - பெங்களூரு இடையே இன்று காலை இயக்கப்படும் டபுள் டெக்கர், பிருந்தாவன் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* சென்னை - திருப்பதி ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* திருவள்ளூர் அருகே 3 மணி நேரமாக தீப்பற்றி எரியும் சரக்கு ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சரக்கு ரெயில் தீ விபத்து தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் கூறியதாவது:-

ஐஓசி மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரெயில், திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே சென்றபோது அதிகாலை 5.20 மணிக்கு தீப்பிடித்துள்ளது.

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே சென்றபோது அதிகாலை 5.20 மணிக்கு தீப்பிடித்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் இல்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

சரக்கு ரெயிலின் பெட்டி தடம் புரண்டதே தீ விபத்துக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மோசம் அடைகிறது காற்றின் தரம்

எரிபொருள் ஏற்றிவந்த சரக்கு ரெயிலில் தீ விபத்து காரணமாக, திருவள்ளூரில் காற்றின் தரக் குறியீடு மோசமடைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி மிதமான அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது என்றும், எரிபொருள் பற்றி எரிவதால் காற்றில் நுண்துகள் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ரெயில் தீ விபத்து - மின் வயர்கள் சேதம்

திருவள்ளூரில் தீ பற்றி எரிந்த டீசல் டேங்கால் சுமார் 200 மீட்டர் அளவிற்கு தண்டவாளம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது

ரெயில்வே டிராக்கில் உள்ள அனைத்து மின்கம்பங்களில் உள்ள மின்சார வயர்கள் சேதமடைந்து உள்ளது. மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகளுக்காக உதவி எண்கள் வெளியீடு

044- 2535 4151, 044 2435 4995 ஆகிய உதவி எண்களை பயணிகள் தொடர்பு கொள்ளலாம் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story