

மதுரை,
மதுரை அருகே சமயநல்லூரில் பிரபல ரவுடி ஒருவரை மர்மக் கும்பல் முகத்தைச் சிதைத்து கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 26). இவர் அப்பகுதியில் 'குட்டிசாக்கு' என்ற பெயரில் பிரபல ரவுடியாக அறியப்பட்டார். இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சமயநல்லூர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்திற்குள் சூர்யா சென்றுள்ளார். அங்குள்ள பாழடைந்த கட்டிடத்தில் அவர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு பயங்கர ஆயுதங்களுடன் திடீரென நுழைந்த ஒரு மர்ம கும்பல், சூர்யாவைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாக வெட்டத் தொடங்கியது.
தப்பி ஓட முயன்ற சூர்யாவை விடாமல் துரத்திச் சென்று வெட்டிய அந்த கும்பல், சூர்யாவின் முகத்தை முற்றிலும் சிதைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. இதில் பலத்த காயமடைந்த சூர்யா, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இன்று (திங்கட்கிழமை) காலையில் அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், சூர்யா பிணமாக கிடப்பதைக் கண்டு சமயநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சூர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பழைய பகை அல்லது தொழில் போட்டி காரணமாக இந்த படுகொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.