நெல்லையில் பயங்கரம்: காதல் திருமணம் செய்த தொழிலாளி கொடூரக்கொலை; போலீசார் தீவிர விசாரணை

மோப்ப நாய்கள் அழைத்து வரப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சந்தேகத்திற்குரிய நபர்கள் 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை
Published on

நெல்லை

நெல்லையில் காதல் திருமணம் செய்த தொழிலாளியின் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.

காதல் திருமணம்

நெல்லை டவுன் பாறையடி மந்திரமூர்த்தி தெருவை சேர்ந்தவர் குருநாதன். இவரது மகன் ஆவுடையப்பன் (வயது 37). பெயிண்டு அடிக்கும் தொழிலாளியான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சுதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்த நிலையில், நெல்லை டவுன்-சங்கரன்கோவில் ரோட்டில் ஒரு கோவில் அருகே, ஆவுடையப்பன் நேற்று காலை நடந்து சென்று கொண்டு இருந்தார்.

கொடூரக்கொலை

அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று ஆவுடையப்பனிடம் தகராறு செய்து, அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர். இந்த சம்பவத்தில் ஆவுடையப்பனின் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டு இருந்தது.

இதனை அறிந்த நெல்லை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆவுடையப்பனின் உடலை பார்த்து மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

உறவினர்கள் சாலை மறியல்

அவர்கள், கொலையில் ஈடுபட்ட மர்மநபர்களை கைது செய்யும் வரை உடலை எடுக்க விடமாட்டோம் எனக்கூறி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மர்மநபர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

அவர்கள் மர்மநபர்களை தேடி வருகின்றனர். விரைவில் மர்மநபர்கள் கைது செய்யப்படுவார்கள் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தெரிவித்தனர்.

முன்பகையா?

இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். அதன் பின்னரே போலீசார் ஆவுடையப்பன் உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலை மறியலால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முன்பகை காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மோப்ப நாய்கள் அழைத்து வரப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சந்தேகத்திற்குரிய நபர்கள் 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com