போரூர் அருகே பயங்கரம்: மோட்டார் சைக்கிளில் சென்றவரை வழிமறித்து வெட்டிக்கொலை

போரூர் அருகே மோட்டார்சைக்கிளில் சென்றவரை 6 பேர் கும்பல் வழிமறித்து வெட்டிக்கொலை செய்தது. அவர் உயிர் தப்பிக்க அங்குள்ள வீட்டுக்குள் தஞ்சமடைந்தபோதும் விடாமல் விரட்டிச்சென்று தீர்த்துகட்டினர்.
போரூர் அருகே பயங்கரம்: மோட்டார் சைக்கிளில் சென்றவரை வழிமறித்து வெட்டிக்கொலை
Published on

சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், சுப்பிரமணிய நகர், பொன்னியம்மன் கோவில் தெரு வழியாக நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல், தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அந்த வாலிபரை வெட்ட முயன்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர், மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். எனினும் அந்த மர்ம கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டியது. அப்போது அங்குள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து கதவை பூட்டிக்கொண்டு தஞ்சம் அடைந்தார்.

அந்த கும்பலும் விடாமல் விரட்டிச் சென்று அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, தஞ்சம் அடைந்த வாலிபரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதனால் அந்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் அலறினார்கள். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த போரூர் போலீசார், கொலையான வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்?, கொலையாளிகள் யார்? என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி போலீ சார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கொலையாளிகள் சிக்கினால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com