கள்ளக்குறிச்சி அருகே பயங்கரம்: பட்டாசு கடையில் தீ விபத்து; 5 பேர் பலி

கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர். இந்த விபத்தில் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின.
கள்ளக்குறிச்சி அருகே பயங்கரம்: பட்டாசு கடையில் தீ விபத்து; 5 பேர் பலி
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் செல்வகணபதி. தீபாவளி பண்டிகையையொட்டி, தனது மளிகை கடையுடன் சேர்த்து பட்டாசுகளையும் வைத்து விற்பனை செய்து வந்தார். மேலும் கடையின் மேல்தளத்தில் உள்ள அறையை குடோனாக பயன்படுத்தி அங்கு பட்டாசுகளை வைத்திருந்தார்.

நேற்று மாலை வழக்கம் போல் கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. மாலை 6.20 மணிக்கு யாரும் எதிர்பாராத வகையில், பட்டாசு கடையில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடிக்க தொடங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில், பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

அப்போது ஏற்பட்ட தீப்பிழம்புங்கள் வானுயர சென்றன. இதை பார்த்ததும், மும்முனை சந்திப்பில் தீபாவளி பண்டிகைக்கான பொருட்கள் வாங்க வந்திருந்த மக்கள், அலறியடித்து நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர்.

இதற்கிடையே கொழுந்து விட்டு எரிந்த தீ அருகில் இருந்த இனிப்பு கடைக்கும் பரவியது. இனிப்பு கடையில் தீபாவளி பண்டிகைக்கான பலகாரம் செய்யும் வகையில், முன்னேற்பாடாக வாங்கி வைக்கப்பட்டு இருந்த கியாஸ் சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்து சிதறின. இதனால் அங்கு வெடிகுண்டு வெடித்தது போன்று சத்தம் ஏற்பட்டு, நிலைமை கைமீறி போனது.

இதுபற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீப்பிழம்புகளுடன், பட்டாசுகளும் தொடர்ந்து வெடித்தபடி இருந்ததால், அவர்களால் தீயை அணைக்க அதன் அருகே கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர், இரவு 8 மணிக்குதான் தீயணைப்பு வீரர்களால் விபத்து நடந்த கட்டிடத்துக்கு அருகே செல்ல முடிந்தது. அப்போது பட்டாசு கடையின் உள்ளே 30 வயது பெண் ஒருவர், உடல் கருகி பிணமாக கிடந்தார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

மேலும், பட்டாசு கடையின் ஒருபகுதி சுவர், அருகே இருந்த செல்போன் கடையின் மீது இடிந்து விழுந்து கிடந்தது. அந்த சமயத்தில் கடையின் முன்பு நின்றிருந்த சங்கராபுரத்தை சேர்ந்த ஷாஆலம் என்கிற லட்டு (வயது 26), காலித்(23) ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

சிதறிய கல் விழுந்து சைக்கிளில் பூ வியாபாரம் செய்த பஷீர்(72) மற்றும் அந்த பகுதியில் சாலையில் நடந்து சென்றவர்கள், கடைகளில் நின்றிருந்தவர்கள் என்று மொத்தம் 12 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும், சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஷாஆலம், காலித், பஷீர் மற்றும் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஆகிய 5 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்றவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் மீட்பு பணியானது இரவு 9.30 மணியை கடந்தும் நடந்து வந்தது. இதனால் விபத்தில் மேலும் சிலர் சிக்கி இருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஏதோ குண்டுவெடிப்பு நிகழ்ந்து, போர்க்களம் போன்று காட்சி அளித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com