மேலும் 2 கொலை வழக்குகளில் பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் கைது - வெளியான புதிய தகவல்கள்

போலீஸ் விசாரணையில் அபுபக்கர் சித்திக் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சென்னை,
தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் பயங்கரவாதி அபுபக்கர் சித்திக். போலீசாரால் தேடப்பட்ட நிலையில், 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவர், ஆந்திர மாநிலம் ராயசூட்டி என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக தமிழக பயங்கரவாத தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆந்திரா சென்ற பயங்கரவாத தடுப்புப்பிரிவு போலீசார் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி அபுபக்கர் சித்திக்கையும், அவருடைய கூட்டாளியான முகமது அலி என்பரையும் கைது செய்தனர்.
அவர்கள் இருவரும் சென்னை அழைத்துவரப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். போலீஸ் விசாரணையில் அபுபக்கர் சித்திக் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
1990-ம் ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள அப்போதைய போலீஸ் கமிஷனர் அலுவலக காம்பவுண்ட் சுவர் அருகே வெடிக்காத பயங்கர குண்டு ஒன்றை போலீசார் கைப்பற்றினார்கள். அதுபோல் மேலும் 5 இடங்களில் வெடிக்காத குண்டுகள் கைப்பற்றப்பட்டன. மேற்கண்ட வழக்குகள் உள்பட மொத்தம் 7 வழக்குகளில் அபுபக்கர் சித்திக்கிற்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த வழக்குகளில் அவர் கைதுசெய்யப்பட்டார்.
அதற்காக 6 நாட்கள் அவரிடம் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. 2013-ம் ஆண்டு பா.ஜனதா மாநில மருத்துவ அணி செயலாளர் அரவிந்த் ரெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் அபுபக்கர் சித்திக்கிற்கு தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டு கைதானார். 2011-ம் ஆண்டு பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரையின்போது மதுரை திருமங்கலம் அருகே பாலத்தின் கீழ் பயங்கர வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த வழக்கிலும் அபுபக்கர் சித்திக் கைதானார்.
இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டார். அதேபோல பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் சேலம் ஆடிட்டர் ரமேஷ் என்பவரும் கொல்லப்பட்டார். அந்த 2 கொலை வழக்குகளிலும் அபுபக்கர் சித்திக்கிற்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த வழக்குகள் தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். 3 கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 11 வழக்குகள் அபுபக்கர் சித்திக்கின் மீது பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






