2 மாத பரோல் முடிந்து பேரறிவாளன் சிறையில் அடைப்பு

2 மாத பரோல் முடிந்து பேரறிவாளன் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். எனது மகன் விரைவில் விடுதலை ஆவார் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க கூறினார்.
2 மாத பரோல் முடிந்து பேரறிவாளன் சிறையில் அடைப்பு
Published on

ஜோலார்பேட்டை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் கடந்த நவம்பர் மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டார். அதன்படி, கடந்த நவம்பர் 12-ந் தேதி சென்னை புழல் சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு அழைத்து வரப்பட்டார். அதன்பிறகு டிசம்பர் 13-ந் தேதி மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது.

இந்தநிலையில் 2 மாதம் பரோல் முடிந்த நிலையில் நேற்று பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க மகனை வழியனுப்பினார்.

சிகிச்சை பெற வேண்டும்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

2 மாதம் பரோல் முடிந்து எனது மகன் சிறைக்கு செல்கிறார். எனது மகன் எங்களோடு பொங்கல் கொண்டாடுவார் என எதிர்பார்த்தோம். வருகிற 21, 22-ந் தேதிகளில் பேரறிவாளனை மருத்துவமனையில் சேர்க்கும் நிலை உள்ளது. 5 நாட்களாக மருத்துவமனையில் இருந்தோம். மறுபடியும் பரோல் நீட்டிக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்ததும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம்.

ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனது மகனுக்கு சிறுநீர் தொற்று உள்ளது. இதற்கு தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும். இதற்காகவாவது பரோலை நீட்டித்து கொடுத்திருந்தால் வசதியாக இருந்திருக்கும்.

விரைவில் விடுதலை

எனது மகன் விடுதலை ஆவதற்கு தமிழக அரசு எனக்கு உதவி செய்யும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது. ஏனென்றால் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா என் கையை பிடித்துக்கொண்டு உனது மகனை உன்னிடம் சேர்க்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார். அந்த நம்பிக்கையில் தான் இத்தனை காலம் வாழ்க்கையை ஓட்டி வருகிறேன்.

எனது மகனுடன் கொஞ்ச நாளாவது வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். வேறு எதுவும் கேட்கவில்லை. எனது மகன் அநியாயமாக இந்த தண்டனையை அனுபவித்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். பேரறிவாளன் விரைவில் விடுதலை ஆவார் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com