பயங்கரவாத அமைப்புகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


பயங்கரவாத அமைப்புகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 23 April 2025 12:04 PM IST (Updated: 23 April 2025 12:08 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு இரங்கல் தெரிவித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தாக்குதல் நிகழ்வு மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும். இதற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. பயங்கரவாத, தீவிரவாத அமைப்பை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் 26 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த சிலரும் காயம் அடைந்திருக்கிறார்கள். இந்த தகவலை கேள்விப்பட்டவுடன் அவர்களை பத்திரமாக மீட்டுக்கொண்டுவர உத்தரவிட்டேன். அதற்கான உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி, காயம் அடைந்த தமிழர்களுக்கு சிகிச்சை அளிப்பதை உறுதி செய்து, அவர்கள் பத்திரமாக அழைத்துவரப்படுவார்கள். இதுபோன்ற செயல்களை அறவே தடுத்து நிறுத்த வேண்டும். பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று சபாநாயகர் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினார்கள்

இதனைத்தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய அவர், "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும், பலியானவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்றைய தினம் பயங்கரவாதிகள் மிகவும் கொடூரமாக தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். இதுவரை 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் நமக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது.

ஜம்மு - காஷ்மீரில் பெஹல்காமுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். பைசரான் பகுதியில் மனிதாபிமானமற்ற வகையில் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய மண்ணில் அறவே இடம் இல்லை. இது போன்ற கடுமையாக தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

இது மிகவும் மோசமான தாக்குதல் என்று ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி ஒமர் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். இத்தாக்குதலை ஒரு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பயங்கரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

காஷ்மீர் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

தேவையான உதவிகளை செய்யவும், மருத்துவ வசதிகளை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரும் தேவையான சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு குல்ஹாமில் 8 பக்தர்களும், 2019 ஆம் ஆண்டில் புல்வாமாவில் 40 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.

இது போன்ற தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் துணை நிற்பார்கள்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 More update

Next Story