3 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காகவிழுப்புரத்துக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வந்தது

3 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக விழுப்புரத்துக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வந்தன.
3 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காகவிழுப்புரத்துக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வந்தது
Published on

விழுப்புரம் மாவட்டத்தில் 1,208 அரசு பள்ளிகளும், 17 நகராட்சி பள்ளிகளும், 65 அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளும், 199 நிதி உதவி பெறும் பள்ளிகளும், 23 பகுதிநேர நிதி உதவி பெறும் பள்ளிகளும் ஆக மொத்தம் 1,512 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் தொடக்கப்பள்ளிகளில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 279 மாணவ- மாணவிகளும், நடுநிலைப்பள்ளிகளில் 77 ஆயிரத்து 975 மாணவ- மாணவிகளும், உயர்நிலைப்பள்ளிகளில் 52 ஆயிரத்து 219 மாணவ- மாணவிகளும், மேல்நிலைப்பள்ளிகளில் 45 ஆயிரத்து 296 மாணவ- மாணவிகளும் ஆக மொத்தம் 3 லட்சத்து 14 ஆயிரத்து 769 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்து வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையும், ஜூன் 5-ந் தேதி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையும் பள்ளிகள் திறக்கப்பட்டு 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் நடைபெற இருக்கிறது. வகுப்புகள் தொடங்கியதும் மாணவ- மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.

விழுப்புரத்துக்கு வந்தது

இதற்காக அரசு பாடநூல் கழகத்தின் மூலம் சென்னை, ஐதராபாத், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அச்சகத்தில் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அவை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் நேற்று சென்னையில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டது. இந்த லாரிகள் விழுப்புரத்தில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கிற்கு வந்து, அங்குள்ள குடோன்களில் விலையில்லா பாடப்புத்தகங்கள் இறக்கி வைக்கப்பட்டன. இங்கிருந்து விழுப்புரம், திண்டிவனம் ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு புத்தகங்கள் பிரித்து அனுப்பப்பட உள்ளது. விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் உள்ள மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் புத்தகங்கள் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்படும்.

பள்ளிகள் திறந்ததும் வழங்கப்படும்

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் முதல் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த புத்தகங்கள் அனைத்தும் அந்தந்த வட்டார மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தவுடனேயே மாணவ- மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com