

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் சுடிதார் அளவு பார்ப்பதாகக் கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜவுளி வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்தாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் வீரமணிகண்டன் (வயது 43). இவர் கார் மூலம் கிராமப் பகுதிகளுக்குச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் கயத்தாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு வியாபாரத்திற்காகச் சென்றுள்ளார்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரிடம் சுடிதார் அளவு பார்ப்பது போல நடித்து, வீரமணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் உடனடியாக இதுகுறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கயத்தாறு போலீசார், பாலியல் தொல்லை கொடுத்த ஜவுளி வியாபாரி வீரமணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.