

சென்னை,
இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்த பிறகு, முதல் முறையாக சுதந்திர தினத்தில் முதல்-அமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக தமிழ்நாடு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார்.
தேசியக்கொடியை ஏற்றிய பிறகு முதல்-அமைச்சர் விஜய் தனது முதல் சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சுதந்திர தின சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. இதன்படி தமிழக அரசின் ‘தகைகசால் தமிழர் விருது’ காங்கிரஸ் மூத்த தலைவர் மு.கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் மு.கிருஷ்ணசாமியின் மகளும், பா.ம.க. எம்.எல்.ஏ.வுமான சவுமியா அன்புமணி கலந்து கொண்டார். தனது தந்தைக்கு ‘தகைசால் விருது’ வழங்கப்பட்டபோது, கைத்தட்டி தனது உற்சாகத்தை சவுமியா அன்புமணி வெளிப்படுத்தினார். இது தொடர்பான காட்சிகளை அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.