தை அமாவாசை: பவானி கூடுதுறையில் திதி கொடுக்க பக்தர்களுக்கு இன்று அனுமதி..

தை அமாவாசையையொட்டி இன்று, பவானி கூடுதுறையில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தை அமாவாசை: பவானி கூடுதுறையில் திதி கொடுக்க பக்தர்களுக்கு இன்று அனுமதி..
Published on

பவானி,

ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள கூடுதுறையில் பவானி ஆறு மற்றும் காவிரி ஆற்றுடன் கண்ணுக்கு புலப்படாத தேவர்களின் அமுத நதியும் கலப்பதாக ஐதீகம்.

எனவே 3 ஆறுகள் சந்திக்கும் பவானி கூடுதுறையில் புனிதநீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களுடைய ஆசி தங்களுடைய குடும்பத்தினருக்கு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை போன்ற நாட்களில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்காக பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வருவது வழக்கம்.

ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பவானி கூடுதுறையில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்களை திறக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் தை அமாவாசை இன்று (திங்கட்கிழமை) வருகிறது. இதையொட்டி பவானி கூடுதுறை திறக்கப்பட்டு திதி மற்றும் தர்ப்பணம் செய்யவும், புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபடவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் இன்று பவானி கூடுதுறையில் அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள். இதனால் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com