

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் நேற்று திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி 25-ந் தேதி கோவைக்கு வருகிறார். நலத்திட்டங்களை வழங்கும் அரசு விழா நடக்க இருக்கிறது. மக்களை சந்திக்கும் பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்துகொள்கிறார். இது பா.ஜனதா தொண்டர்களிடம் மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்பாக இந்த வருகை இருப்பதால், இது தேர்தல் பிரசார கூட்டமாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி உறுதி. இதனை உணர்த்துவதற்காகத்தான் முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சரின் கைகளை பிரதமர் உயர்த்தி காண்பித்தார்.
தேர்தல் நெருங்கிய நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வாக உள்ளது. இது நியாயமான மற்றும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. பல வரி திட்டங்கள் பெட்ரோல், டீசலுக்கு உள்ளது. ஒரே வரியாக ஜி.எஸ்.டி. வரி வசூலித்தால் விலை குறையும். காங்கிரஸ் ஆட்சி விட்டு சென்ற கடனை அடைப்பதற்காக மக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. விரைவில் பெட்ரோல், டீசல்
விலை உயர்வை குறைக்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.