

சென்னை,
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்க விழா இடம்மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில், தாய்மாமன் சீர்மரபைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு ரூ.755.83 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் நடைபெறுவதாக இருந்த விழா, தற்போது மதுரைக்கு மாற்றப்பட்டு உள்ளது. விழாவானது, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த இடமாற்றம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அரசு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.