

பழனி,
தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் இன்று தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் இன்று புகழ்பெற்ற தைப்பூச தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 6 ஆம் நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று 7 ஆம் நாள் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மாலை 4.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவில் அருகே தைப்பூச தேரோட்டம் தொடங்கியது.
இந்த தேரோட்டத்தில் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுக்கவும், முருகப்பெருமானை தரிசிக்கவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் வரும் வழி நெடுகிலும் தண்ணீர் பந்தல், அன்னதான கூடங்களில் உணவு, குடிநீர், ஐஸ்கிரீம், இளநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
தேரோட்ட நிகழ்ச்சியின் போது பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்லும் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அதோடு பழனி முருகன் கோவிலில் தரிசனம் முடித்த பின்பு பக்தர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் 4 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.