நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் வரும் 1-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.
நெல்லை,
நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி சன்னதியில் உள்ள பிள்ளையார் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெறுகிறது.
வரும் 26-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு சுவாமி சன்னதியில் ‘நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்' நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும், பின்னர் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து பிப்ரவரி மாதம் 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜையும், அதை தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
2-ந்தேதி காலை 10 மணிக்கு கீழரதவீதி சவுந்தர சபை மண்டபத்தில் நடராஜர் திருநடன காட்சியும், பின்னர் சந்தி விநாயகர் கோவில் அருகே திருக்காட்சி வைபவமும் நடைபெறுகிறது. 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு சொக்கப்பனை முக்கு அருகே உள்ள சந்திர புஷ்கரணி எனப்படும் வெளி தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.






