

பழனி,
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடாக, பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா, பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து குவிந்தனர். அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பக்தர்களுக்கு தடை
இந்தநிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பழனி தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில் தைப்பூசத்தின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று பெரியநாயகி அம்மன் கோவிலில் நடந்தது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோவில் உட்பிரகாரத்தில் தேர் வலம் வந்தது.
சிறிய தேர்கள்
இந்த தேரோட்டமானது, பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர 4 ரதவீதிகளில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் முதன்முறையாக பக்தர்கள் இன்றி, கோவில் உட்பிரகாரத்தில் சிறிய தேரில் சுவாமி எழுந்தருளி வலம் வந்தார்.
முன்னதாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சிறிய தேரில் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 4.40 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் 15 நிமிடத்தில் முடிவடைந்தது. மேலும் பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தடுக்க கோவில் வாசல் பூட்டப்பட்டது.
காவடிகளுடன் கிரிவலம்
கோவிலில் தரிசன தடை உத்தரவு ஒருபுறம் இருந்தாலும் தைப்பூச திருவிழாவில் பங்கேற்க நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வந்தனர்.
மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லாததால் அவர்கள் பழனி கிரிவீதிகளில் வலம் வந்து பாதவிநாயகர் கோவில் முன்பு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதேபோல் அதிகாலையில் கிரிவலம் வந்த பக்தர்கள் சூரியனையும் வழிபட்டனர்.
தரிசன தடை நேற்றுடன் முடிவடைந்ததால், இன்று (புதன்கிழமை) சாமி தரிசனம் செய்வதற்காக பழனியில் உள்ள தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் ஏராளமான பக்தர்கள் தங்கி உள்ளனர்.