குமரி அனந்தனுக்கு தகைசால் விருது: தமிழக அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி நன்றி

காங்கிரஸ் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் விருது வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
குமரி அனந்தனுக்கு தகைசால் விருது: தமிழக அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி நன்றி
Published on

சென்னை,

தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தனுக்கு தகைசால் விருது வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனை வரவேற்று, தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் கன்னியாகுமரி எம்.பி., விஜய் வசந்த் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர், தமிழ் இலக்கியவாதி, எனது பெரியப்பா குமரி அனந்தன் அவர்களுக்கு தகைசால் விருதினை வழங்க தமிழ் நாடு அரசு முடிவு செய்திருப்பது வரவேற்க்கதக்கது. இதற்காக தமிழ் நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

பெருந்தலைவர் காமராஜர் வழி நடந்து, காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கிய தலைவராக விளங்கி, தமிழை தனது மூச்சாக கொண்டு வாழ்ந்து வரும் இலக்கிய செல்வர் குமரி அனந்தன் அவர்களுக்கு இந்த விருது வழங்கியிருப்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கும், குமரி மக்களுக்கும் இது பெருமை சேர்ப்பதாகும்.

ஐயா காமராஜர் மறைவிற்கு பின் அவர் வழியில் நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினராகவும், 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்துள்ளார். பல சமூக பிரச்சினைகளுக்காக இவர் மேற் கொண்ட பாத யாத்திரைகள் இவரது சமூக அக்கறைக்கு எடுத்துக்காட்டு. இன்று பாராளுமன்றத்தில் தாய் மொழி தமிழில் கேள்வி கேட்கும் உரிமையை பெற்று தந்தவர் குமரி அனந்தன் தான். அது போன்று தபால் நிலையங்களில் தமிழில் தந்தி விண்ணப்பம், காசாணை ஆகியவற்றையும் பெற்று தந்தார்.

மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என்ற பெயர் வர காரணமும் குமரி அனந்தன்தான். தமிழன் பணிய மாட்டான் ஆகையால் கனிவோடு கூறுங்கள் என ரயில் நிலைய அறிவிப்பை மாற்ற செய்தார் அவர். நதிகளை இணைக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பல முயற்சிகள் மேற்கொண்டார். "கங்கையே வருக, குமரியை தொடுக" என்ற கனவோடு வாழ்கிறார் அவர். அவரது மேடை பேச்சுக்களும், அவர் எழுதிய புத்தகங்களும் அவரது தமிழ் புலமைக்கு சான்று. இத்தகைய தலைவருக்கு தகைசால் விருதினை அரசு வழங்கியிருப்பது மிக பொருத்தமானது. அவரை வாழ்த்த வயதில்லை. ஆகையால் அவரது பணிகளுக்கு முன் வணங்குகிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com