கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் இன்று திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி

விழாவில் 16-ம் நாளான நாளை காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

உளுந்தூர்பேட்டை,

திருநங்கைகள் குலதெய்வமாக வணங்கும் கூத்தாண்டவர் கோவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 9-ந்தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி மாலை 4 மணிக்கு சாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் கடந்த சில நாட்களாக உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு வந்து தங்கி உள்ளனர்.

இவர்கள் பட்டுப்புடவை, வளையல், நகைகள் உள்ளிட்டவற்றை அணிந்தும், தலைநிறைய பூ வைத்து தங்களை புதுமண பெண்கள்போல் அலங்கரித்துக்கொண்டும் கூத்தாண்டவர் கோவிலுக்கு வருகை தர உள்ளனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு பூசாரியின் கையால் தாலி கட்டிக்கொள்ள உள்ளனர். அதன் பின்னர் இரவு முழுவதும் திருநங்கைகள் கூவாகம் கிராமத்தில் தங்கி ஆடி பாடி மகிழ உள்ளனர்.

தொடர்ந்து விழாவில் 16-ம் நாளான நாளை (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அதன் பின்னர் அரவாண் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது திருநங்கைகளின் கழுத்தில் கட்டப்பட்ட தாலியை பூசாரி அறுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். தாலியை அறுத்தவுடன் திருநங்கைகள் தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிந்தும், நெற்றியில் உள்ள குங்குமத்தை அழித்தும் வெள்ளை நிற சேலை அணிந்து விதவைக்கோலம் பூண்டு ஒப்பாரி வைத்து அழுவார்கள். அதன்பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து செல்ல உள்ளனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com