தஞ்சை: மழையால் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம் - விவசாயிகள் வேதனை

தஞ்சையில் நேற்று திடீரென இடி, மின்னலுடன் கூடிய பலத்த கனமழை, தொடர்ந்து 3 மணிநேரமாக பெய்துள்ளது.
நெல் மூட்டைகள்
Published on

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் பகுதியில் பெய்த கனமழையால் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் மழை

தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் பகுதியில் நேற்று திடீரென இடி, மின்னலுடன் கூடிய பலத்த கனமழை பெய்தது. தொடர்ந்து சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் அப்பகுதியில் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்தன.

அந்த கிடங்கில் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தற்காலிகமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நெல் மூட்டைகளை மூடிப் பாதுகாக்க தேவையான அளவு தார்ப்பாய்கள் இல்லாததால், சுமார் 50 ஆயிரம் நெல் மூட்டைகளில் மழைநீர் புகுந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

விவசாயிகள் கோரிக்கை

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கு அனுப்பாமல், பல மாதங்களாக ஒரே இடத்தில் தேக்கி வைத்திருந்ததே இந்த இழப்புக்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், தற்போது நனைந்துள்ள நெல் மூட்டைகளை உடனடியாக உலர வைக்கவோ அல்லது நவீன உலர் கலன்களுக்கு மாற்றவோ நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நெல் மணிகள் முளைக்கத் தொடங்கி முற்றிலும் பயன்பாடற்ற நிலைக்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

விவசாயிகளின் உழைப்பின் பலன் வீணாகாமல் தடுக்க, அரசு உடனடியாக தலையிட்டு நனைந்த நெல் மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் கையாள வேண்டும் என்றும், சம்பவத்துக்கு காரணமான அலட்சிய அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்டா பகுதி விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com