

தஞ்சாவூர்,
தமிழகத்தில் மாவட்டந் தோறும் கவர்னர் பன்வாரிலால் சுற்றுப் பயணம் செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதை தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏற்கனவே கோவை, நெல்லை, குமரி, சேலம், கடலூர் ஆகிய இடங்களில் கவர்னர் ஆய்வு நடத்திய போது தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கவர்னர் பன்வாரிலால் நேற்று தஞ்சைக்கு வந்தார். தஞ்சையில் கவர்னரின் ஆய்வை கண்டித்து கவர்னருக்கு தி.மு.க. சார்பில் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்ட பணிகளை கவர்னர் பன்வாரிலால் தொடங்கி வைத்தார்.
கவர்னர் வருவதற்கு முன்னதாக இன்று காலை 9 மணியளவில் புதிய பஸ் நிலைய பகுதியில் ஏராளமான தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்தப்படி , கைகளில் கருப்பு கொடியுடன் திரண்டனர். இதில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, பழனி மாணிக்கம், முன்னாள் எம்.பி. எல்.கணேசன், திருவிடைமருதூர் எம்.எல்.ஏ. கோவி.செழியன், தஞ்சை நகர செயலாளர் நீலமேகம், இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன் உள்பட 300-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். மேலும் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கலந்து கொண்டனர்.
அப்போது போலீசார் தஞ்சை புதிய பஸ் நிலைய எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். இதைதொடர்ந்து தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி முன்பு தி.மு.க.வினர் திரண்டு சென்றனர்.
காலை 9.45 மணியளவில் புதிய பஸ் நிலையத்தில் கவர்னர் ஆய்வு செய்வதற்காக சரபோஜி கல்லூரி அருகே காரில் சென்றார். அப்போது தி.மு.க.வினர் தயாராக வைத்திருந்த கருப்பு கொடியை காண்பித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
#blackflagstruggle #BanwarilalPurohit #DMK