

தஞ்சாவூர்,
பாரம்பரிய சின்னத்தை பேணி பாதுகாக்கும் வகையில் தஞ்சை பெரிய கோவில் மதில் ரூ.59 லட்சத்தில் சீரமைக்கப்படுகிறது. அதில் உள்ள செடி, கொடிகளை அகற்றி பழமை மாறாமல் பாதுகாக்கப்படுகிறது.
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தஞ்சை பெரியகோவில் சுற்றுச்சுவர் மேல் மதில் பகுதியில் வளர்ந்துள்ள செடி, கொடிகள் மற்றும் தாவரங்கள், அவற்றின் வேர்கள் வழியாகக் கற்களின் இடைவெளிகளுக்குள் ஊடுருவி காலப்போக்கில் கட்டுமானத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது. மேலும் மழைநீர் தேங்குதல் உள்ளிட்ட காரணிகளும் பழமையான கட்டுமானப் பகுதிகளின் சிதைவுக்கு வழிவகுக்கிறது.
இதை கருத்தில் கொண்டு, மேல் மதில் பகுதியில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளைச் சீரமைத்து பாதுகாக்க தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட மதில் பகுதிகளில் செங்கல் துகள்களைக் கொண்ட கான்கிரீட் கலவையான 'பிரிக் ஜெல்லி கான்கிரீட்' பூச்சு அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்புக்குள்ளான பகுதிகளைப் பாதுகாத்து, தொடர்ந்து சிதைவு ஏற்படுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
எனினும், ஆயிரம் ஆண்டுகளை கடந்த பாரம்பரியக் கட்டுமானத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள், அதன் அசல் தன்மைக்கும் தொல்லியல் பாதுகாப்பு விதிமுறைகளுக்கும் பொருந்தும் வகையில் பழமை மாறாமல் அப்படியே செயல்படுத்தப்படுகிறது.
ரூ.59 லட்சம் மதிப்பீட்டிலான இத்திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம், தஞ்சை பெரிய கோவிலின் மேல் மதில் பகுதியைப் பராமரித்து, அதன் கட்டமைப்பு உறுதித்தன்மையைப் பேணுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணிகளை மேற்கொள்வதன் மூலம் மத்திய பகுதியின் கட்டமைப்பு தொடர்ந்து பேணுவதோடு. பாரம்பரிய சின்னத்தை நீண்ட கலத்திற்கு பாதுகாக்கவும் உதவும்.
இந்த பாதுகாப்பு பணிகள், பழங்கால சின்னங்களை பராமரிப்பதன் அவசியத்தையும், அவற்றை, அறிவியல் பூர்வமாக பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துகின்றன. இந்தப் பாதுகாப்பு திட்டத்தின் மூலம், தஞ்சை பெரிய கோவிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டுமானத்தை நீண்ட காலத்திற்கு பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.