

தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 486 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண் எடுத்து இருந்தாலும் தமிழ்ப் பாடத்தில் 91 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தது. எனவே அவர் மறு கூட்டலுக்காக விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். விடைத்தாள் நகல்கள் நேற்று வெளியிடப்பட்டன. விடைத்தாளை பார்த்த அந்த மாணவி பேரதிர்ச்சி அடைந்தார்.
காரணம் அவருடைய தமிழ்ப்பாட விடைத்தாளின் முதல் பக்கத்தில் அவர் 101 மதிப்பெண்கள் பெற்றிருப்பதாக குறிக்கப்பட்டிருக்கிறது. அதாவது வினா வாரியாக மாணவியின் கூடுதல் 15 + 21 + 65 = 101 என்று வருகிறது. அதுபோலவே பக்கவாரியாகவும் மதிப்பெண்களின் கூடுதல் 38 + 56 + 7 = 101 என்று வருகிறது.
ஆனால் இந்த 2 இடங்களிலும் கூட்டுத்தொகை 91 என்று விடைத்தாள் திருத்திய ஆசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார். மாணவி விடைத்தாளில் 100 மதிப்பெண்களுக்கு முழுமையாக விடை எழுதி இருந்தாலும் 3 விடைகளில் தலா ஒரு மதிப்பெண்கள் வீதம் குறைந்ததால் 97 மதிப்பெண்கள் வரவேண்டும். அதே சமயம் விடைத்தாளில், வினா எண்கள் 38, 39 ஆகியவற்றுக்கு 5 மதிப்பெண்களுக்கு பதிலாக 7 மதிப்பெண்களை வழங்கி உள்ளனர்.
இதனால் 4 மதிப்பெண்கள் கூடுதலாக வந்துவிட்டது. எனவே கூட்டுத்தொகை 101 என்று வருகிறது. விடைத்தாள் திருத்தியவர், விடைத்தாளை கூர்ந்தாய்வு செய்தவர், தலைமை தேர்வாளர் ஆகிய 3 பேரும் இந்த தவறை கவனிக்காமல் விட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மாணவியின் மதிப்பெண்கள் 91 என்று மதிப்பெண் பட்டியலில் குறிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து மாணவி மீண்டும் மறுகூட்டலுக்காக விண்ணப்பித்துள்ளார்.
தஞ்சையில் தேர்வுத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் மறுகூட்டலுக்காக விண்ணப்பித்த பிறகு இது குறித்து மாணவி கூறியதாவது:-
அனைத்து தேர்வுகளையுமே நான் சிறப்பாக எழுதியிருந்தேன். கணிதம், அறிவியலில் தலா 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். 500-க்கு 500 மதிப்பெண்கள் எதிர்பார்த்த நிலையில் 486 மதிப்பெண்கள் மட்டுமே வந்திருந்ததை பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அதிலும் தமிழில் 9 மதிப்பெண்கள் குறைந்து இருந்தது.
இப்படி மதிப்பெண் குறைந்ததற்கு நான் காரண மல்ல என்பது விடைத்தாள் நகல் மூலம் உறுதியாகிவிட்டது. மிகவும் அலட்சியமாக விடைத்தாளை திருத்தியதால் எனக்கு மதிப்பெண் குறைந்துள்ளது. எனவே மீண்டும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளேன். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் இனி வருங்காலத்தில் கவனமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.