தஞ்சாவூர்: ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் இணை ஆணையர், தோழி கைது

தஞ்சாவூரில் வன்மீகநாதர் கோவில் திருப்பணி தொடர்பான அனுமதி, நிர்வாக நடவடிக்கைகளுக்காக காண்டிராக்டரிடம், தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.
பெண் இணை ஆணையர், தோழி கைது
Published on

தஞ்சாவூர்,

தஞ்சாவூரில் கோவில் திருப்பணிக்கு அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் இணை ஆணையரையும், அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட தோழியையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கோவில் திருப்பணி

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில் மிகவும் பழமையான, பிரசித்தி பெற்ற வன்மீகநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியை நாகப்பட்டினத்தை சேர்ந்த காண்டிராக்டரான மதியழகன் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திருப்பணி தொடர்பான அனுமதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக மதியழகனிடம் தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

ரூ.1 லட்சம் லஞ்சம்

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மதியழகன், இதுகுறித்து தஞ்சையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து ஜோதிலட்சுமியை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரின் அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.1 லட்சத்தை எடுத்துக்கொண்டு மதியழகன், நேற்று மாலை தஞ்சையில் உள்ள மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார்.

கையும், களவுமாக பிடித்து கைது

அப்போது ஜோதிலட்சுமியிடம் கொடுப்பதற்காக மதியழகன் பணத்தை எடுத்தபோது அதை அங்கு இருந்த இடைத்தரகராக செயல்பட்ட தோழி கிரிஜா பெற்றுக்கொண்டார். இதையடுத்து அங்கு மறைந்திருந்த தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து இணை ஆணையர் ஜோதிலட்சுமி (வயது 47), இடைத்தரகர் கிரிஜா(51) ஆகிய 2 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

வீட்டிலும் சோதனை

கைது செய்யப்பட்ட ஜோதிலட்சுமியின் வீடு தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பிலோமினாநகர் பகுதியில் உள்ளது. அந்த வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். மேலும் இந்த வழக்கில் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com