

தஞ்சாவூர்
கும்பகோணம் அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள உத்தானி பகுதியில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. தஞ்சாவூர் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று பயணிகளுடன் வந்த அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
மேலும் விபத்து நடந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்கும் பணியில் உடனடியாக இறங்கினர். இந்த விபத்தில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதிகளும் பலத்த சேதமடைந்தன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உள்ளூர் காவல் துறையினர், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தின் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.