

சென்னை,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-
இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன.
உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.