

சென்னை,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பருத்திக்கு விதிக்கப்பட்டிருந்த 11℅ இறக்குமதி வரி ஜவுளி உற்பத்தியாளர்களை பெருமளவில் பாதித்ததும், இறக்குமதி வரியை நீக்க வேண்டுமென்று இந்தியா முழுவதும் இருக்கின்ற ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்ததையும் எல்லோரும் அறிவோம். பருத்தி கொள்முதல் விலை உயர்ந்த காரணத்தால் நூல் விலை உயர்ந்ததால் துணி தயாரிப்பு மற்றும் ஆயத்த ஆடை தயாரிப்பு பாதிக்கப்பட்டது. டீசல் விலை ஏற்றத்தாலும், வெளிநாட்டு கப்பல்களில் ஏற்றுமதியாகின்ற பொருட்களுடைய போக்குவரத்து கட்டணமும் போர் சூழல்களால் அதிகரித்து இருப்பதாலும் ஜவுளி சார்ந்த ஏற்றுமதியாளர்கள் நூல் விலை உயர்வை தாங்கிக் கொள்ள முடியாமல் உற்பத்தி குறைப்பை ஆரம்பிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்கள். இந்தியாவிலிருந்து ஜவுளி பொருட்களை வாங்குகின்ற பல நாட்டு வாடிக்கையாளர்களுக்கும் சந்தையில் இந்திய பொருள்களுடைய விலை நூல் விலை உயர்வால் அதிகமானதால் வேறு போட்டி நாடுகளின் பக்கம் தங்களின் பார்வையை திருப்பினார்கள். இதன் மூலமும் இந்திய ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைப்பை கட்டாயமாக அமல்படுத்த வேண்டிய சூழல் உருவானது. இதன் மூலம் வேலை இழப்புகளை சந்திக்க நேரிட்டது.
இந்தியாவில் இருக்கின்ற நூல், துணி, ஆயத்த ஆடை சார்ந்த சங்கங்கள் மத்திய மந்திரிகளை சந்தித்து பஞ்சுக்கான இறக்குமதி வரியை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதல்-அமைச்சரும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்கள். ஜவுளி உற்பத்தியாளர்களுடைய கோரிக்கையின் உண்மை தன்மையை உணர்ந்து, ஏற்படும் பாதிப்புகளை புரிந்து கொண்டு மத்திய அரசு பருத்திக்கான இறக்குமதி வரியை கைவிட்டு இருக்கிறது அதை வரவேற்கிறோம். இன்றைய காலகட்டத்தில் சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான், வியட்நாம், இலங்கை போன்ற நாடுகளில் இருக்கின்ற ஜவுளி உற்பத்தியாளர்களோடு போட்டி போட்டு கொண்டுதான் இந்திய ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. மூலப் பொருளுக்கான இறக்குமதி வரி என்பது இந்திய ஏற்றுமதியாளர்களின் போட்டி போடக்கூடிய திறனை குறைப்பதாக அமையும். அதனால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருக்கின்ற பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக கைவிடுவதற்கு அரசு முன்வர வேண்டும். இறக்குமதி வரி விதித்த தேதியிலிருந்து தற்போது ரத்து செய்த தேதி வரை இடைப்பட்ட காலத்தில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதி ஆர்டர்கள் நமக்கு கைநழுவி போனதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.