

பழனி,
பழனி முருகன் கோவிலில் தங்கரதப் புறப்பாட்டுக்கான கட்டணம் ரூ.2,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தினமும் இரவு 7 மணிக்கு தங்கரதப் புறப்பாடு நடைபெறுகிறது. இதற்காக இதுவரை ரூ.2,000 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டணத்தைச் செலுத்தும் பக்தர்களில் 3 பேர் தங்கரதத்தை இழுக்கவும், 5 பேர் சிறப்பு தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், தங்கரதம் இழுக்கும் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாத தொகுப்பும் வழங்கப்படுகிறது.
சாதாரண நாட்களில் தினமும் 50 முதல் 100 பக்தர்கள் வரையிலும், விசேஷ நாட்களில் 200 முதல் 400 பக்தர்கள் வரையிலும் தங்கரதம் இழுத்து வழிபாடு செய்கின்றனர். கடந்த 2011-ம் ஆண்டு முதல், அதாவது 15 ஆண்டுகளாக தங்கரதம் இழுப்பதற்கான கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், தங்கரதம் இழுக்கும் பக்தர்களுக்கு தரமான பிரசாதப் பொருட்களை வழங்கும் நோக்கில், கட்டணத்தை ரூ.2,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதுதொடர்பாக பக்தர்களிடம் கருத்துகளும் கேட்கப்பட்டன. அப்போது கட்டண உயர்வுக்கு பலர் ஆட்சேபனை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், நேற்று முன்தினம் முதல் திடீரென தங்கரதப் புறப்பாட்டுக்கான கட்டணம் ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, நவம்பர் 1-ம் தேதி முதல் பிரசாதங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
தங்கரதக் கட்டணம் மற்றும் பிரசாதங்களின் விலை உயர்வால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, இந்தக் கட்டண உயர்வுகளை திரும்பப் பெற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.