இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு மாபெரும் வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி - திருமாவளவன்

தமிழ்நாடு மற்றும் பிறமாநில மக்கள் பா.ஜனதா கூட்டணிக்கு மீண்டும் பாடம் புகட்டியுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் 13 தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், அனைத்து தொகுதிகளிலும் கட்சி வாரியாக பெற்ற வெற்றி விவரங்கள் வெளிவந்துள்ளன.

இதன்படி, பீகாரில் ரூபாலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இமாசல பிரதேசத்தில் 2 இடங்களில் காங்கிரசும், பா.ஜனதா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும் வெற்றி பெற்றுள்ளன. இதேபோன்று தமிழகத்தில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. உத்தரகாண்டில் 2 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், இந்த இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மத்திய பிரதேசம் மற்றும் இமாசல பிரதேசத்தில் தலா 1 தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் வலைதளத்தில், "தமிழ்நாடு மற்றும் பிறமாநில மக்கள் பா.ஜனதா கூட்டணிக்கு மீண்டும் பாடம் புகட்டியுள்ளனர். சாதி, மத, பிற்போக்கு சக்திகளை அனுமதிக்கமாட்டோம் என்பதில் மக்கள் உறுதியாகவுள்ளதை 13 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மகத்தான வெற்றியை வழங்கியுள்ள வாக்காளர்களுக்கு வி.சி.க. சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாக்காளர்களை குறைத்து மதிப்பிடும் குறைமதியாளர்கள், பொது மக்களிடையே வலுப்பெற்றுள்ள அரசியல் புரிதலை இன்னும் புரிந்து கொள்ளாமல் தங்களின் தோல்விக்கு வேறு காரணங்களை தேடுகின்றனர்.

நாடு முழுவதும் 13 இடங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் 10 இடங்களில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு மாபெரும் வெற்றியை வழங்கியுள்ள மக்களுக்கு நன்றி" என்று அதில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com