

சென்னை,
ஜனாதிபதியிடம் தேசிய விருது பெற்ற தந்தி டி.வி.க்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தந்தி டி.வி.க்கு தேசிய விருது
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக, தந்தி டி.வி.க்கு சிறந்த தொலைக்காட்சிக்கான தேசிய விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். இந்த விருதினை அவரிடம் இருந்து தந்தி டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பெற்றுக்கொண்டார்.
தேசிய விருது பெற்ற தந்தி டி.வி.க்கும், அதன் நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனுக்கும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வைகோ
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜனநாயகத்தின் காவலர்கள் வாக்காளர்கள் தான் என்பதால், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிறப்பான சேவை செய்ததற்காக, தமிழகத்தில் இருந்து இயங்கும் தந்தி தொலைக்காட்சிக்கு 2016ம் ஆண்டுக்கான தேசிய விருது ஜனாதிபதியால் வழங்கப்பட்டது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமையாகும்.
தந்தி டி.வி.க்கு சிறந்த தொலைக்காட்சிக்கான தேசிய விருதினை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்க, தந்தி டி.வி. நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பெற்றுக்கொண்ட செய்தி மனதுக்கு மிகவும் இனிப்பானது ஆகும்.
இதழியல் உலகில் ஈடு இணையற்ற மகத்தான புரட்சியை ஏற்படுத்திய தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாருக்கும், அவர் காட்டிய வழியில் தினத்தந்தி நாளிதழை நடத்திச் சென்று இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகிற நாளிதழ் என்ற முத்திரையைப் பெற்றுத்தந்த சிவந்தி ஆதித்தனாருக்கும், அர்ப்பணிப்பு பெருமையோடு தந்தி டி.வி. தேசிய விருதினைப் பெற்று இருக்கிறது. மேலும் மேலும் சிறப்புகள் பெற தந்தி டி.வி.க்கு என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பதாவது:
தகுதியானவர்களால் நடத்தப்படும் தகுதியான தொலைக்காட்சிக்கு தகுதியான விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காக எனது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விருது தந்திக் குழுமம் சூடியிருக்கும் மணி மகுடத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் வைரக்கற்களுடன் மேலும் ஒன்றாக இணைந்து சிறப்பு சேர்க்கும். தந்தி குழுமத்தையும், அதன் ஊடகங்களையும் பற்றி மக்களுக்கு சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. தமிழர் தந்தை என்று போற்றப்படும் சி.பா.ஆதித்தனாரால் தொடங்கப்பட்ட தினத்தந்தி நாளிதழ் இன்று கோடிக்கணக்கானவர்களால் நேசித்துப் படிக்கும் நாளிதழாக மிளிர்ந்து கொண்டிருக்கிறது. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பது தினத்தந்தி குழுமத்தை வழி நடத்திச் செல்லும் ஆதித்தனாரின் வாரிசுகளுக்குத் தான் பொருந்தும்.
தேர்தல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு வரும் தந்தி தொலைக்காட்சி எந்த பணியிலும் ஈடுபடுத்திக்கொண்டு தமிழகத்தில் ஜனநாயகத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
சு.திருநாவுக்கரசர்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறியிருப்பதாவது:
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மின்னணு ஊடகங்களில் தமிழகத்தைச் சேர்ந்த தொலைக்காட்சிக்கு விருது கிடைத்திருப்பது மிகவும் பெருமைக்குரியதாகும். தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தி ஒளிபரப்புவதிலும், விவாத நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் தனி முத்திரை பதித்து வருகிறது தந்தி தொலைக்காட்சி. பல்வேறு பொதுவான கருத்துகளின் அடிப்படையில் மிகச் சிறப்பான விவாதங்களை நடுநிலையோடு நடத்திய பெருமை தந்தி தொலைக்காட்சிக்கு உண்டு.
தந்தி டி.வி.க்கு தேசிய விருதை இந்திய தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது அனைவராலும் பாராட்டப்படக்கூடிய ஒன்றாகும். தமிழக மக்கள் அனைவரின் ஆதரவை தொடர்ந்து பெற்று மேலும் பல விருதுகளைப் பெற தந்தி தொலைக்காட்சியை வாழ்த்துகிறேன்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து
தினத்தந்தி நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தனுக்கு கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தந்தி தொலைக்காட்சிக்காகத் தாங்கள் ஜனாதிபதியிடம் தேசிய ஊடக விருதுபெற்ற காட்சியைப் பார்த்து நான் கைதட்டிக்கொண்டிருந்தேன். தங்கள் உயரம் எங்கள் உயரம். குறுகிய காலத்தில் இப்படி ஒரு பெரிய விருது பெற்றது தங்கள் நிர்வாகத்தின் நேர்த்தி சொல்லும் சாட்சியாகும்.
தமிழர் தந்தை ஆதித்தனார் தங்கள் தந்தை சிவந்தி ஆதித்தனார் இருவரின் பேர் சொல்லும் பிள்ளை தாங்கள் என்று ஊர் சொல்ல வைத்துவிட்டீர்கள். தாங்கள் தொட்டது துலங்குகிறது என்பது ஊருக்கு விளங்குகிறது. தாங்கள் தொட்டது குன்றுதான், தொடவிருப்பது சிகரம். வளருங்கள், வாழ்த்துகள்.
இவ்வாறு வைரமுத்து கூறியிருக்கிறார்.
விக்கிரமராஜா
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியிருப்பதாவது:
தந்தி தொலைக்காட்சி பல்வேறு பிரச்சினைகளில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற சிறந்த செய்தி தொலைக்காட்சியாக அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. தற்போது, அதற்கு மகுடம் வைத்தாற்போல், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக தந்தி தொலைக்காட்சிக்கு தேசிய விருது ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.
தந்தி தொலைக்காட்சி பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளை அரசியல் சார்பின்றியும், தேர்தல் நேரத்தில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது உண்மையானது. எனவே, இந்த தேசிய விருதினை பெற்றிருக்கின்ற தந்தி தொலைக்காட்சிக்கு தமிழக வணிகர்கள் சார்பில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றது. தந்தி தொலைக்காட்சி மேலும் பல சாதனைகளை படைத்து பல்வேறு விருதுகளை பெறவும் வாழ்த்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கே.வி.தங்கபாலு
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, தமிழக தலித் கட்சி தலைவர் டி.டி.கே.தலித்குடிமகன், தமிழ்நாடு மருத்துவர் சவரத் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர்.கே.வெங்கடேசன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.