

தேனி,
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றிய பகுதிகளில் இந்த ஆண்டு தட்டாங்காய் விளைச்சல் பன்மடங்கு அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறுகிய காலத்தில், சீரான லாபம் தரும் பயிராக தட்டாங்காய் மாறியுள்ளது.
கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மூலக்கடை, முத்தாலம்பாறை உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தட்டாங்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விதைத்த 40 நாட்களிலேயே அறுவடைக்கு தயாராகிவிடும் என்பதால், இப்பகுதி விவசாயிகள் தட்டாங்காய் பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது காய்ப்பிடிப்பு அதிகரித்து விளைச்சல் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் இப்பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இங்கு விளையும் தட்டாங்காய்களுக்குத் தமிழகத்தை விட அண்டை மாநிலமான கேரளாவில் அதிக வரவேற்பு உள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த காய்களை உடனுக்குடன் லாரிகள் மூலம் சின்னமனூர் சந்தைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கிருந்து தினந்தோறும் டன் கணக்கில் தட்டாங்காய்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தற்போது சந்தையில் 1 கிலோ தட்டாங்காய் 30 ரூபாய் வரை சீரான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. விளைச்சலும் அமோகமாக இருந்து, விலையும் கை கொடுப்பதால் தங்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதாகக் கடமலை-மயிலை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.