தாயுமானவர் திட்டம்: திமிரி அருகே வீடுதேடி சென்ற ரேஷன் பொருட்கள்


தாயுமானவர் திட்டம்: திமிரி அருகே வீடுதேடி சென்ற ரேஷன் பொருட்கள்
x
தினத்தந்தி 15 Sept 2025 1:47 PM IST (Updated: 15 Sept 2025 1:51 PM IST)
t-max-icont-min-icon

தாயுமானவர் திட்டம் மாதந்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை,

தமிழ்நாடு அரசு 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை கடந்த மாதம் 12-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை பொதுமக்களின் வீடுதேடிச் சென்று வழங்கும் தமிழக அரசின் உயரிய நோக்கத்தின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் ‘முதல்வரின் தாயுமானவர் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் நலன் சார்ந்த இந்த திட்டம் சிறப்பு கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன், உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இந்த திட்டத்தின் வாயிலாக 34,809 ரேசன் கடைகளைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளிகள், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத் தினாளிகள் என மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளிகள் இதன் மூலம் பலனடைகின்றனர். அவர்களது வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாதந்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தில் பயன்பெறத் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், மின்னணு எடைத்தராசு, மின்னணு விற்பனைமுனைய இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன், மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாக பயனாளர்களின் வீட்டுக்கே கொண்டுசென்று, ரேஷன் கடை ஊழியர்கள் விநியோகிப்பர். இத்திட்டத்தால் அரசுக்கு கூடுதலாக ரூ.35.92 கோடி செலவாகிறது.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே மழையூர் என்ற கிராமத்தில் நேற்று ரேஷன் கடை பணியாளர்கள், முதியோர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களை வழங்கினர்.

முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மீது முதல்-அமைச்சர் மிகுந்த அக்கறையுடன், வீடு தேடி மருத்துவம், தாயுமானவர் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று அக்கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

1 More update

Next Story