

காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தில் 25-வது நாளாக அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். இன்று தங்க சரிகை பதியப்பட்ட மஞ்சள் பட்டு உடுத்தி மல்லிகை மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, நைவேத்தியம் செய்யப்பட்டு அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
இன்று காலை லேசான சாரல் மழை பெய்த நிலையில், மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அத்திவரதர் வைபவத்தின் 24-ம் நாளான நேற்று 1 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில் கடந்த 24 நாட்களாக மொத்தம் 33 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இன்று அதிகாலை முதல் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அத்திவரதர் தரிசனம் மேற்கொண்ட நிலையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்ய காத்திருக்கின்றனர்.
இன்று அத்திவரதர் உற்சவத்தில், நடிகர் பிரபு பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பக்தர்களின் வசதிக்காக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்தார்.
அத்திவரதரை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று தரிசனம் செய்தார்.