

சென்னை,
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 9, 10ம் வகுப்புகளில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
2015 -16ல் எட்டு சதவீதமாக இருந்த இடைநிற்றல், அடுத்த ஆண்டு 16 சதவீதம் என்ற அளவில் நூறு சதவீதம் அதிகரித்துள்ளதன் மூலம், அ.தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை எந்த அளவு மிக மோசமான சீரழிவுக்கு உள்ளாகியிருக்கிறது என்ற ஆதாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், 2015-16ம் ஆண்டில் 3.76 சதவீதமும், 2016-17இல் 3.75 சதவீதமும், 2017-18இல் 3.61 சதவீதமும் தான் இடைநிற்றல் ஏற்பட்டதாக சட்டமன்றத்தில், கொள்கை விளக்க குறிப்புகளில் பொய்யான புள்ளி விவரங்களை அ.தி.மு.க. அரசு கூறுகிறது என்பது வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
9, 10ம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றலில் ஏற்பட்ட நூறு சதவீத உயர்வை அப்படியே மறைத்து, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் நடத்தப்பட்டிருந்தால் எத்தகைய பாதிப்புகளை மாணவர் சமுதாயம் சந்திக்க நேர்ந்திருக்கும் என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
எனவே 9 மற்றும் 10ம் வகுப்புகளில் மாணவர்களின் இடைநிற்றலுக்கு என்ன காரணம் என்பதை ஆய்வு செய்ய மூத்த கல்வியாளர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை அவர் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் ஒரு மாணவர் கூட பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் அபாயகரமான, ஆரோக்கியமற்ற சூழல் நடைபெறாமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தமிழக அரசை அவர் வலியுறுத்தி உள்ளார்.