‘மாநில கல்வி உரிமையை பறிக்கும் செயல்’ மு.க.ஸ்டாலின் அறிக்கை

“உயர்கல்வி ஆணைய மசோதாவால் மாநிலத்தின் கல்வி உரிமை பறிக்கப்படும்”, என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
‘மாநில கல்வி உரிமையை பறிக்கும் செயல்’ மு.க.ஸ்டாலின் அறிக்கை
Published on

சென்னை,

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் கடந்த ஜூன் மாதம், உயர்கல்வி ஆணைய வரைவு மசோதாவை இணையதளத்தில் வெளியிட்டு, 62 ஆண்டுகளாகச் செயல்படும் பல்கலைக்கழக மானியக்குழுவைக் கலைக்க கருத்து கேட்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து, கருத்து கேட்கும் படலம் கைவிடப்பட்டது.

இந்தநிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடரில் சமீபத்தில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரி சத்யாபால் சிங், உயர்கல்வி ஆணைய மசோதா தொடர்பாக 7,529 பேரிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளன. கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் மானியம் ஒதுக்குவதில் வெளிப்படைத்தன்மையுடன் உயர் கல்வி ஆணையம் இயங்கும், என்று கூறி குழப்பதை ஏற்படுத்தியுள்ளார்.

மாநிலத்தின் கல்வி உரிமையைப் பறிப்பதற்காகவே இந்த ஆணையத்தை பா.ஜ.க. கொண்டுவர விரும்புகிறது. இது பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட பாதிப்பை விட, மோசமான பாதிப்பை நாட்டின் உயர்கல்வியில் ஏற்படுத்திவிடும். தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் உள்ள கல்லூரிகளின் கல்வி முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக அமையும்.

எப்படி பார்த்தாலும் இந்த ஆணையம், மாநிலங்களின் கல்வி வளர்ச்சிக்கு ஒருவகையிலும் உதவாது. மாறாக இருக்கிற கல்வி நிலையங்களையும் மூடுவதற்கே வழி வகுக்கும். மாநிலத்தின் கல்வி உரிமைக்கு மாறான உயர்கல்வி ஆணைய மசோதாவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.

கல்வியை காவி மயமாக்கவில்லை, உயர்கல்வியில் சீர்திருத்தம் கொண்டு வருவதே நோக்கம் என்றால், ஆணையத்தின் 14 உறுப்பினர்களில் மாநிலங்களின் பிரதிநிதிகள் 3-ல் இரண்டு மடங்கு இருக்கவேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்கும் அதிகாரம் ஆணையத்திடமே இருக்கவேண்டும். அந்தவகையில் மசோதா மாற்றியமைக்கப்பட வேண்டும். இல்லையென்றால் மற்ற மாநிலக் கட்சிகளின் ஆதரவையும் திரட்டி பாராளுமன்றத்தில் தி.மு.க. போராட்டம் நடத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com