பேருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை அடித்து இறக்கிவிட்ட நடிகை கைது

மாணவர்களை தாக்கியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளில் ரஞ்சனா நாச்சியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பேருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை அடித்து இறக்கிவிட்ட நடிகை கைது
Published on

சென்னை,

சென்னை போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். இதனை பெண் ஒருவர் வீடியோ எடுத்து, பேருந்தை வழிமறித்து நடத்துனர் மற்றும் ஓட்டுநரை அவதூறாக பேசினார். அத்துடன் ஆபத்தான முறையில் பயணம் செய்த மாணவர்களை அடித்து கீழே இறக்கிவிட்டுள்ளார்.

பள்ளி, கல்லூரி மாணவர்களை பெண் ஒருவர் அடித்ததோடு பேருந்து ஓட்டுநர், நடத்துனரை அவதூறாக பேசியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனை தொடர்ந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண் யார் என மாங்காடு போலிசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர் பாஜக நிர்வாகியும் சின்னத்திரை நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், தன்னை போலீஸ் என கூறிக்கொண்டு, அரசு பேருந்தில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை தாக்கி, ஓட்டுநர், நடத்துனரை ஆபாசமாக பேசிய ரஞ்சனா நாச்சியாரை போலீசார் கைது செய்தனர். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அளித்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைதுசெய்தனர்.  

அவர் மீது அரசு பேருந்தை தடுத்து நிறுத்தியது, மாணவர்களை தாக்கியது, ஆபாசமாக பேசியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரஞ்சனா நாச்சியாரை அவரது வீட்டில் வைத்து கைது செய்த மாங்காடு போலீசார், விசாரணைக்காக அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ரஞ்சனாவின் நோக்கம் சரிதான் என்றாலும், அவர் செயல்படுத்திய முறைதான் தவறு என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com