

சென்னை,
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கடந்த 5ந்தேதி பங்கேற்க இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று 42,750 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார்.
இந்த நிகழ்ச்சிக்காக அன்றைய தினம் காலை பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் வாயிலாக செல்ல இருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக மோடியின் ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டது.
ஆனால், விவசாயிகளின் போராட்டம் காரணமாக சாலை மறிக்கப்பட்டிருந்ததால் பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலத்தில் பிரதமர் மோடி சென்ற வாகனம் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள், 15-20 நிமிடங்கள் அப்படியே நின்றன. பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய குளறுபடி நடைபெற்ற நிலையில், மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
உடனடியாக பதிண்டா விமான நிலையத்திற்கே பிரதமர் மோடி திரும்பிச்சென்றார். பாதுகாப்பு குறைபாடுகளால் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
பஞ்சாபில் பிரதமர் பாதுகாப்பு மீறல் தொடர்புடைய சம்பவத்தில் பெரோஸ்பூர் மாவட்டத்தின் குல்காரி காவல் நிலையத்தில், பிரிவு 283ன் கீழ் அடையாளம் தெரியாத 150 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறும்போது, பிரதமரின் பஞ்சாப் பயணத்தின்போது பாதுகாப்பு மீறல் நடந்தது என குற்றம் சாட்டுவது ஆச்சரியம் ஏற்படுத்துகிறது என கூறியுள்ளார்.
இது ஏற்கெனவே திட்டமிட்ட நாடகமோ? என்ற வலுவான சந்தேகம் ஏற்படுத்துகிறது. பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்குடன் மாநில காங்கிரஸ் அரசை கலைக்க மத்திய அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.