ரசாயனம் கலந்து விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு: தனியார் பால் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை

பால் கெட்டுப்போகாமல் இருக்க தனியார் நிறுவனத்தினர் ரசாயன பொருட்களை சேர்ப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டி இருந்தார்.
ரசாயனம் கலந்து விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு: தனியார் பால் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை
Published on

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் இந்த குற்றச்சாட்டை கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

பாலில் ரசாயனம் கலந்து மக்களுக்கு விற்பனை செய்வதாக தனியார் பால் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. மனுக்கள், தபால்கள், போன் மூலம் புகார்கள் வந்தன.

அதன் அடிப்படையில் அந்தந்த கம்பெனிகளிடம் இருந்து மாதிரி எடுத்து சோதனை செய்கிறோம். குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் அதுபற்றி அறிவிக்கப்படும். தற்போது அந்த நிறுவனங்களின் பெயரை சொல்ல முடியாது.

தனியார் பால் நிறுவனங்களே ஒருவர் மீது ஒருவர் புகார் கூறுகின்றனர். பெரும்பாலான தனியார் பால் நிறுவனங்கள் ரசாயன கலப்பு என்ற தவறைச்செய்கின்றனர். இதை கண்டுபிடிக்க சென்னை, சேலம், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் ரகசிய குழுக்கள் அமைத்துள்ளோம். துறை சார்ந்த ஊழியர்கள் அனைவரையும் முடுக்கியுள்ளோம்.

இதுபற்றிய அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் கிடைத்துவிடும். குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், தவறு செய்த தனியார் பால் நிறுவனங்கள் மூடப்படும். அதுமட்டுமல்லாமல் அந்த நிறுவனத்தார் மீது கிரிமினல் வழக்கும் தொடரப்படும்.

தயிராகிவிட்டாலும் கூட அவர்கள் அதை கெமிக்கல் மூலம் பாலாக்கி விற்பனை செய்கிறார்கள். பல நாட்கள் ஆகியும் அந்த நிறுவனங்களின் பால் கெடுவதில்லை. அப்படியானால் அது உண்மையான பால் இல்லை.

உண்மையான பால், கறந்து 5 மணி நேரத்தில் கெட்டுவிடும். அதற்குள் உறை ஊற்றினால் கெடாது. உண்மையான பழமும் குறிப்பிட்ட காலத்தில் கெட்டுவிடும். அப்படி கெடாவிட்டால் அது ரசாயனம் கலந்த பழமாகத்தான் இருக்கும். அது உடல் நலத்துக்கு கேடானது.

புண்களுக்குத் தடவும் ஹைட்ரஜன் பெர்ஆக்சைடு மற்றும் குளோரின் போன்ற வேதிப்பொருட்கள் பாலில் கலக்கப்படுகின்றன. அவர்கள் தவறு செய்யவில்லை என்றால், தங்கள் கம்பெனிக்கு சமூக ஆர்வலர்களை அழைத்துச் சென்று நிரூபிக்க முடியுமா?

தனியார் பால் நிறுவனங்களின் பால் கிடைக்காவிட்டால் மக்கள் அனைவருக்கும் ஆவின் பால் நிறுவனம் மூலம் பால் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பால் பவுடர் தயாரிப்பை நிறுத்திவிட்டு அனைவருக்கும் ஆவின் நிறுவனம் மூலம் பால் வழங்க முடியும். பால் கிடைக்கவில்லை என்பதற்காக விஷத்தை குடித்துவிட முடியாதே. இவ்வாறு அவர் கூறினார்.

பாலில் ரசாயனம் சேர்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு தனியார் பால் நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்து உள்ளன.

அமைச்சரின் குற்றச்சாட்டை ஆரோக்யா பால் நிறுவனம் மறுத்துள்ளது. பாலில் கலப்படம் இல்லை என்றும், அனைத்து சோதனைக்கு பின்னரே பால் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com