மோசமான வானிலையால் தரை இறங்க முடியாததால் அந்தமான் சென்ற விமானம் மீண்டும் சென்னை திரும்பியது

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு சென்ற விமானம் மோசமான வானிலையால் தரை இறங்க முடியாததால் மீண்டும் சென்னை திரும்பியது.
மோசமான வானிலையால் தரை இறங்க முடியாததால் அந்தமான் சென்ற விமானம் மீண்டும் சென்னை திரும்பியது
Published on

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு பிற்பகல் 2.30 மணிக்கு 152 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் மாலை 4 மணி அளவில் அந்தமானை நெருங்கும்போது அங்கு பலத்த சூறைக்காற்று வீசி கொண்டு இருந்ததால் மோசமான வானிலை நிலவியது.

இதையடுத்து விமானி, விமானத்தை தரை இறக்காமல் வானில் வட்டமடித்து கொண்டு இருந்தார். ஆனால் வானிலை சீரடையவில்லை. இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் விமானி தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார். கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள். விமானத்தை மீண்டும் சென்னைக்கே திருப்பி கொண்டு வரும்படி அறிவுறுத்தினர்.

இதையடுத்து விமானம் மாலை 6 மணி அளவில் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்து தரை இறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். விமானம் ரத்து செய்யப்பட்டதாகவும், நாளை (அதாவது இன்று) காலை விமானம் அந்தமான் செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் சில பயணிகள், நாங்கள் வெளியூரில் இருந்து வந்திருக்கிறோம். எங்களுக்கு தங்குவதற்கு இடவசதி செய்து கொடுங்கள் என அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அதற்கு அவர்கள், உள்நாட்டு விமான பயணிகளுக்கு அதுபோல் இடவசதி செய்து கொடுக்கும் விதிமுறை இல்லை என்று கூறிவிட்டனர்.

அந்தமான் சென்ற விமானம் அங்கு தரை இறங்காமல் திரும்பி வந்து விட்டதால் அங்குள்ள 166 பயணிகள் சென்னை வரமுடியாமல் தவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com