பொறியியல் கல்லூரிகளில் நிலவும் போலி பேராசிரியர்கள் நியமனத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்


பொறியியல் கல்லூரிகளில் நிலவும் போலி பேராசிரியர்கள் நியமனத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்
x

கோப்புப்படம் 

295 பொறியியல் கல்லூரிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி பேராசிரியர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஒரு மாநிலத்தின் வளமான பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்கும் மனித வள மேம்பாட்டிற்கு அடிப்படையாக விளங்குவது உயர் கல்வி. இதிலும் குறிப்பாக நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்துவதில் பொறியியல் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த உயர் கல்வி அனைவருக்கும் தரமான முறையில் வழங்கப்பட வேண்டுமென்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால், தமிழ்நாட்டில் இதற்கு முற்றிலும் முரணான நிலைமை நிலவுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், முந்நூறுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பல பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிவது ஓராண்டிற்கு முன்பே வெளிக் கொணரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், கிட்டத்தட்ட 295 பொறியியல் கல்லூரிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலி பேராசிரியர்கள் இருப்பதும், ஒரு பேராசிரியர் 33 கல்லூரிகளில் பணிபுரிவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மூன்று உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை அமைத்ததையடுத்து, அந்தக் குழு தனது பரிந்துரையை சமர்ப்பித்தது. இந்தப் பரிந்துரை என்பது அபராதம், தவறிழைத்தோரை பணியிலிருந்து நீக்குவது, கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது உள்ளிட்ட தண்டனைகளை உள்ளடக்கியதாகும். இருப்பினும், இதனைச் செயல்படுத்துவதற்கான முடிவினை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு இதுவரை எடுக்கவில்லை.

இதன் விளைவாக, போலி பேராசிரியர்களுடன் பல்வேறு பொறியியல் கல்லூரிகள் இயங்கிக் கொண்டிருக்கும் அவல நிலை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. தி.மு.க. அரசின் செயலற்ற தன்மை என்பது போலி பேராசிரியர்களை ஊக்குவிப்பது போல் அமைந்துள்ளது. இதன்மூலம், மாணவ, மாணவியரின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.

எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தரமான உயர் கல்வியை அனைத்து மாணவ, மாணவியரும் பெறும் வகையில், பொறியியல் கல்லூரிகளில் நிலவும் போலி பேராசிரியர்கள் நியமனத்தை தடுத்து நிறுத்தவும், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உயர் கல்வித்துறையால் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தவும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் விதிமுறைகளுக்கு ஏற்ப பேராசிரியர்களை நியமிக்குமாறு பொறியியல் கல்லூரிகளுக்கு கட்டளைப் பிறப்பிக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story