

ஆத்தூர்:-
தலைவாசல் அருகே பிளஸ்-2 மாணவி கர்ப்பமாக்கிய வழக்கில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஆயுதப்படை போலீஸ்காரர் தப்பிஓடிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தடி வருகின்றனர்.
பிளஸ்-2 மாணவி கர்ப்பம்
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள வேப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். பிரபாகரன் மீது தலைவாசல் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவியின் பெற்றோர் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்களது மகள் தலைவாசல் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் வேப்பநத்தம் கிராமத்தை சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரர் பிரபாகரன் என்பவர் எங்களது மகளிடம் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்ததில் எங்கள் மகள் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். எங்களுடைய மகளுக்கு 17 வயதே ஆகிறது. எனவே எங்கள் மகளின் கர்ப்பத்துக்கு காரணமான போலீஸ்காரர் பிரபாகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
விசாரணையின் போது தப்பிஓட்டம்
இந்த புகார் குறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் மாணவியை கர்ப்பமாக்கிய பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்து போலீஸ்காரர் பிரபாகரனை அழைத்து வர 2 ஆண் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் பிரபாகரனை பிடித்து கொண்டு வந்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி முன்னிலையில் விசாரணைக்கு ஆஜர்படுத்தினர். சிறிது நேரத்தில் விசாரணையின் இடையே போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பித்து வெளியே வந்த அவர் அங்கிருந்த தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
தனிப்படை
விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட போலீஸ்காரர் தப்பிஓடியது குறித்து தகவல் கிடைத்ததும், ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார்.
மேலும் விசாரணையின் போது தப்பிஓடிய போலீஸ்காரர் பிரபாகரனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் தப்பிஓடிய பிரபாகரனை வலைவீசி தேடி வருகின்றனர்.