

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் காஜாமைதீன் (வயது 55). இவர் நேற்று முன்தினம் ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் உள்ள மருந்து கடையின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மருந்து வாங்க சென்றார். அந்த சமயம் பார்த்து அங்கு கையில் பையுடன் நின்று கொண்டு இருந்த மர்ம நபர் ஒருவர் காஜாமைதீன் அசந்த நேரம் பார்த்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்று விட்டார். மருந்து வாங்கிவிட்டு திரும்பி வந்து பார்த்த காஜாமைதீன் தனது மோட்டார் சைக்கிளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டபோது கையில் பையுடன் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் சாவியை வைத்துவிட்டு காஜா மைதீன் சென்றதை நோட்டமிட்டு மோட்டார் சைக்கிள் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து காஜாமைதீன் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.