கவர்னர் உரையுடன் இன்று கூடுகிறது தமிழக சட்டசபை...!

தமிழக சட்டசபை இன்று (புதன்கிழமை) கூடுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். கொரோனா அச்சுறுத்தலால் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
கவர்னர் உரையுடன் இன்று கூடுகிறது தமிழக சட்டசபை...!
Published on

சென்னை,

ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் தமிழக சட்டசபை கூடும்போது கவர்னர் வந்து உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று தொடங்குகிறது.

கொரோனா

கொரோனா அச்சுறுத்தல் இருந்து வரும் சூழ்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்றது. கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், மீண்டும் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கத்தில் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால், சட்டசபை கூட்டத்தை கலைவாணர் அரங்கத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் விரைவாக செய்யப்பட்டன. சபாநாயகர் அப்பாவு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்.

கவர்னர் ஆர்.என்.ரவி உரை

இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல்கூட்டம் என்பதால், கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்.

இதற்காக, காலை 9.55 மணிக்கு கலைவாணர் அரங்கத்திற்கு வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்று அரங்கத்திற்கு அழைத்து வருவார்கள். பின்னர், சபாநாயகர் இருக்கையில் கவர்னர் அமருவார். அவருக்கு வலதுபுறம் உள்ள இருக்கையில் சபாநாயகர் அப்பாவு, இடதுபுறம் உள்ள இருக்கையில் கவர்னரின் செயலாளர் ஆனந்த் ராவ் பாட்டிலும் அமருவார்கள்.

சரியாக காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கும். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அப்போது, அவையில் உள்ள அனைவரும் எழுந்து நிற்பார்கள். அதன்பின்னர், கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை ஆங்கிலத்தில் தொடருவார். இந்த உரை சுமார் 1 மணி நேரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார்.

எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

அத்துடன் இன்றைய கூட்டம் நிறைவடையும். தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும்.

இந்த கூட்டத்தில், கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது.

இதற்கிடையே சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க உள்ள எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்நிலையில் பெரம்பலூர் தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபாகரன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள கே.எம்.சி. ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது கார் டிரைவர் மற்றும் உதவியாளர்கள் மணிகண்டன், இளையராஜா, சிவசங்கர் உள்பட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எம்.எல்.ஏ.வின் குடும்பத்தினர் உள்பட சிலருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறந்தாங்கி எம்.எல்.ஏ.

இதேபோல் திருச்சி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசின் மகனும், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.டி.ராமச்சந்திரனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் சட்டசபை கூட்டத்தையொட்டி கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து டாக்டர்களின் ஆலோசனையின்படி அவர் சென்னையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.

இன்றோடு கூட முடிக்க வாய்ப்பு

ஏற்கனவே, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. எனவே, இந்த சட்டசபை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்ள திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அலுவல் ஆய்வு குழு கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

ஒருவேளை இன்று மதியம் மீண்டும் சட்டசபையை கூட்டி, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை நடத்தி ஒரே நாளில் முடித்துவிடவும் திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

பத்திரிகையாளர்கள், சட்டசபை ஊழியர்கள் என 12 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒரே நாளில் சட்டசபை கூட்டம் நிறைவு செய்யப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு அலுவல் ஆய்வு குழு கூட்டம் முடிவடைந்த பிறகு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com