ஜனநாயகத்தின் இதயமாக பேரவை செயல்பட வேண்டும்: முதல்-அமைச்சர் விஜய் பேச்சு

மக்களின் எதிர்பார்ப்புகளை செயல்படுத்தும் திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு பேரவைக்கு உள்ளது என முதல்-அமைச்சர் விஜய் கூறினார்.
ஜனநாயகத்தின் இதயமாக பேரவை செயல்பட வேண்டும்:  முதல்-அமைச்சர் விஜய் பேச்சு
Published on

சென்னை,

சட்டப்பேரவைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுதற்காக தவெக சார்பில், ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல, பேரவைத் துணைத் தலைவர் பதவிக்கு துறையூர் தொகுதி தவெக எம்எல்ஏ எம். ரவிசங்கர் மனு தாக்கல் செய்தார்.

பேரவைத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலுக்கு தவெக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள ஜே.சி.டி. பிரபாகர், எம்.ரவிசங்கர் ஆகியோருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

இந்த நிலையில், சட்டப்பேரவைத் தலைவராக ஜே.சி.டி. பிரபாகர், துணைத் தலைவராக ரவிசங்கர் இருவரும் போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டனர்.

மரபுப்படி அவை முன்னவர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோர் ஜே.சி.டி. பிரபாகரை அழைத்துச் சென்று சட்டப்பேரவைத் தலைவர் இருக்கையில் அமர வைத்தனர்.

சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.சி.டி. பிரபாகருக்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பேரவை உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சபாநாயகரை வாழ்த்தி தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் சட்டமன்றத்தில் முதல் முறையாக முதல்-அமைச்சர் விஜய் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் சொன்ன சுவாரசிய வரலாறு

இங்கிலாந்தில் மன்னராட்சி இருந்த காலத்திலேயே நாடாளுமன்றம் செயல்பட்டது. மன்னர் ஒரு பணியை செய்ய வேண்டும் என்று விரும்புபோடு நாடாளுமன்றம் அதை நிராகரிக்கும். நாடாளுமன்ற கருத்தை மன்னரிடம் சொல்ல வேண்டியவர் சபாநாயகர். அதற்கு துணிவு வேண்டும்.சில பணிகளை செய்ய நாடாளுமன்ற அனுமதி வேண்டுமே தவிர, மரண தண்டனை அளிக்கும் முடிவு மன்னருக்கு உண்டு.தான் விரும்பியதை நாடாளுமன்றம் நிராகரித்ததை சொல்லும் சபாநாயகருக்கு மன்னர் மரண தண்டனை விதிப்பார்.

சபாநாயகரின் தலையை வெட்டி விடுவதால் யாருமே அந்த பதவிக்கு வரமாட்டார்கள். நாடாளுமன்றத்தில் புதிய ஆட்சி அமையும்போது சபாநாயகர் அறிவிக்கப்பட்டால் அவர் ஓட்டம் பிடித்துவிடுவார். அவை முன்னவரும், எதிர்க்கட்சி தலைவரும் அவரை தடுத்து நிறுத்தி இருக்கையில் அமர வைப்பார்கள். இதுதான் அந்த காலத்தில் இருந்த மரபு. ஜனநாயக முறையிலும் அந்த மரபு தொடர்கிறது.

ஜனநாயகத்தின் இதயமாக இந்த பேரவை செயல்பட வேண்டும். மக்களே மக்களுக்காக நடத்தும் ஆட்சி மக்களாட்சி என ஆபிரகாம் லிங்கன் கூறியுள்ளார்.

தவெக உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகருக்கு உதவியாக செயல்படுவார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை செயல்படுத்தும் திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு பேரவைக்கு உள்ளது. அதிகமான மக்கள் இந்த ஆட்சியில் நன்மை பெற்றுள்ளார்கள் என சொல்லும் வகையில் செயல்பாடு இருக்க வேண்டும்.

சட்டமன்ற நடவடிக்கைகள் சீராக, செம்மையாக நடக்க வேண்டும். ஒரு உறுப்பினர் உள்ள கட்சிக்கும் அவையில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். பேரவையில் அனைவரும் சமம். சட்டமன்ற மரபுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். அதிகமான மக்கள் இந்த ஆட்சியில் நன்மை பெற்றுள்ளார்கள் என சொல்லும் வகையில் செயல்பாடு இருக்க வேண்டும் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com