

குன்னம்:
தார் சாலை அமைக்க கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தில் ஒரு தரப்பை சேர்ந்த மக்களில் யாரேனும் இறந்தால், அவர்களது உடலை நன்னையில் இருந்து தனியாருக்கு சொந்தமான நிலங்களை கடந்து சின்னாற்றங்கரையில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் மற்றொரு தரப்பை சேர்ந்த நில உரிமையாளர் ஒருவர் சாலை வசதி ஏற்படுத்த மறுப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.இப்பகுதியில் கோடை காலங்களில் இறந்தவர் உடலை எடுத்துச்செல்ல எளிதாக இருப்பதாகவும், மழைக்காலங்களிலோ அல்லது விவசாயம் செய்யும் காலங்களிலோ இறந்தவர் உடலை எடுத்துச்செல்ல சிரமமாக உள்ளதாகவும், எனவே இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு தார்சாலை அமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
போராட்டம்
இந்நிலையில் நேற்று இறந்தவரின் உடலை சாலையில் வைத்து, மயானத்திற்கு செல்ல தார் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பால்பாண்டி ஆதிதிராவிடர் நல தாசில்தார் சத்தியமூர்த்தி, மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு சந்தியா, குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், தற்போது மண் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், தார் சாலை அமைக்க கலெக்டரின் அனுமதி பெற்று நடவடிக்கை எடுப்பதாகவும் கோட்டாட்சியர் உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.