தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷனா? - விஜய்யை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்

மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷனா? - விஜய்யை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்
Published on

மதுரை,

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல் விஜய் தன்னை நினைத்துக் கொள்கிறார். அதை மக்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம், மாநாடு நடத்தலாம்; ஆனால் மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது.

அதிமுக குறித்த விஜய்யின் விமர்சன பேச்சுக்களை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக தொண்டர்கள் மனவேதனையுடன் உள்ளார்கள் என்பது விஜய்க்கு எப்படி தெரியும்?, எந்த அறிமுக தொண்டரிடம் விஜய் பேசினார். யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் அதிமுக குறித்து விஜய் விமர்சனம் செய்து பேசியிருக்கலாம்.

விஜய்க்கு எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம், அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவித்திருக்கிறோம். எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்து விஜய் பேசினால் அது அவருக்கு தான் பின்னடைவாக மாறும். மக்களின் தீர்ப்பை எதிர்பார்த்து தான் அதிமுக தேர்தல் களத்தில் நிற்கிறது, விஜய்யின் கருத்துகளை நம்பி அதிமுக இல்லை. திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணி தான் சரியானது என தேசிய கட்சிகளுக்கு கூட தெரிந்துள்ளது.

அண்ணா, எம்.ஜி.ஆர்.-ஐ தவிர்த்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாத காரணத்தால் விஜய் அண்ணாவையும், எம்ஜிஆர் குறித்தும் பேசுகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் ஆசான் யார்? என்பது தெரியவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டாக விஜய் கை குழந்தையாக உள்ளார். கட்சியை ஆரம்பித்த உடன் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைப்பது கனவு.

முதல் மாநாட்டில் திமுகவை பாயாசம் என்றார் விஜய்; இந்த மாநாட்டில் பாய்சன் என்கிறார்; அடுத்த மாநாட்டில் அமுது என்று பேசுவாரா?; என்ன பேசுவார் என்று தெரியாது; அவருக்குதான் தெரியும். மதுரை சுற்றுவட்டார மாவட்டங்களில் செப்டம்பர் முதல் வாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com