

சென்னை,
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை கலை அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு, ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் நிறுவன தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான எஸ்.ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார்.
பிரபஞ்சன் (புனைகதை), கலாப்பிரியா (நவீன இலக்கியம்), சுப.வீரபாண்டியன் (கட்டுரை), தீபம் எஸ்.திருமலை (இலக்கியம்), கே.ஜீவபாரதி (இதழாளர்), ஆலந்தூர் கோ.மோகனரங்கன் (கவிதை), பி.எல்.ராஜேந்திரன் (சிறுவர் இலக்கியம்) ஆகியோருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதினை எஸ்.ஜெகத்ரட்சகன் வழங்கினார். விருது பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் எஸ்.ஜெகத்ரட்சகன் பேசியதாவது:
தி.மு.க. தலைவர் கருணாநிதி பெயரில் விருது வழங்குவதை பெருமையாக கருதுகிறேன். பேனாவில் நிரப்பிய மை அனைத்தையும் தமிழாக்கிய ஒரே தலைவர். சேரன், சோழன் மற்றும் பாண்டியன் ஆகிய 3 பேரின் ஒரே வடிவமாக கருணாநிதி திகழ்கிறார்.
எழுதுகோலுக்கும், செங்கோலுக்கும் வரலாற்றில் இடம் பிடித்து தந்த ஒரே தலைவர். பனை ஓலையில் இருந்த தமிழுக்கு, பச்சை ரத்தம் பாய்ச்சியவர். உடன்பிறப்பு என்ற ஒற்றை சொல்லில் உலகத்தையே கட்டிப்போட்டிருக்கிறார்.
எதிர்ப்புக்கு அஞ்சாத இளம் தமிழகத்தின் ஒரே தலைவர் கருணாநிதிதான். ஒரு கோடி பக்கங்கள் எழுதிய ஒரே தலைவரும் அவர்தான். தமிழ்நாட்டில் பிறக்காமல், வெளிநாட்டில் பிறந்திருந்தால் நோபல் பரிசு பெற்றிருப்பார். அரசியல், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்ட கருணாநிதியிடம் பேசினால், பல்கலைக்கழகங்களில் படித்த ஞானம் கிடைக்கும்.
கருணாநிதியின் எழுத்தும், பேச்சும் வந்த பிறகுதான் அரசியல் குடிசைக்கு வந்தது. கருணாநிதி பெயரில் விருது வழங்கும் விழா பெரிய அளவில் நடத்தவேண்டும் என்பது என் ஆசை. இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை ஐகோர்ட்டு வக்கீலும், தி.மு.க. மாநில செய்தித்தொடர்பு இணை செயலாளருமான தமிழன் பிரசன்னா சிறப்புரை நிகழ்த்தினார். விருது பெற்றவர்கள் சார்பில் பிரபஞ்சனும், சுப.வீரபாண்டியனும் ஏற்புரை நிகழ்த்தினர்.
முன்னதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன் வரவேற்புரையாற்றினார். செயலாளர் கே.எஸ்.புகழேந்தி நன்றியுரை நிகழ்த்தினார்.
விழாவில், தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.