நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் டாக்டர் ராமதாஸ் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் டாக்டர் ராமதாஸ் பேட்டி
Published on

சேலம்,

நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம், தர்மபுரி ஆகிய ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று சேலம் இரும்பாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.

இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற அயராது பாடுபடுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக அரசு நிறைய வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வருகிறது என்று முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். ஆனால் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்நோக்கி செல்கிறது. மோட்டார் வாகன துறையில் கடந்த ஆண்டு ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு வந்து இருக்க வேண்டும். ஊழல் காரணமாக ஆந்திரா, தெலுங்கானாவிற்கு சென்று இருக்கிறது.

தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டம் அதிகம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறதா? ஊழல் அதிகமாக நடந்து இருக்கிறதா? என்று பொது வாக்கெடுப்பு நடத்த முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாரா? உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் மத்திய அரசிடம் இருந்து ரூ.3,558 கோடி நிதி வரவில்லை.

ஜி.எஸ்.டி. காரணமாக கடந்த ஒரு ஆண்டில் 50 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. தொழில் வளர்ச்சியில் தமிழகம் 15வது இடத்தில் உள்ளது. பிளஸ்2 மற்றும் பட்டப்படிப்பு படித்த 80 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்கு காத்திருக்கிறார்கள். 10 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் மறுமதிப்பீட்டில் ரூ.100 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கிறது. எனவே ஊழல் குறித்து சி.பி.ஐ. தலைமையில் பல்துறை வல்லுனர்கள் குழு விசாரிக்க அரசு ஆணையிட வேண்டும். மேலும் பல்கலைக்கழக ஊழல் குறித்து அறிக்கை தயார் செய்து வருகிறோம். விரைவில் கவர்னரை சந்தித்து அறிக்கை கொடுக்க உள்ளோம்.

தேர்தலில் வாக்குச்சீட்டு முறை தேவை என்று காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட 17 கட்சிகள் வலியுறுத்துகிறது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும்.

8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். மேட்டூர் அணையை தூர் வார வேண்டும். அணையின் மொத்த கொள்ளளவு 94 டி.எம்.சி. தண்ணீர். ஆனால் தற்போது 65 முதல் 65 டி.எம்.சி. தண்ணீர் தான் உள்ளது. மீதி சேறும், சகதியுமாக உள்ளது. 15 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com