கடையம் அருகே 3 பேரை கடித்து குதறிய கரடி; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

கடையம் அருகே உள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பில் 3 பேரை கடித்து குதறி அட்டகாசம் செய்த கரடி பிடிபட்டது.
கடையம் அருகே 3 பேரை கடித்து குதறிய கரடி; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்
Published on

சிவசைலம்,

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் வைகுண்டமணி. இவர் கடையம் சுற்றுவட்டாரப்பகுதியில் மசாலா வியாபாரம் செய்து வருகிறார். இவர், இன்று காலை சிவசைலம் அருகே உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு என்ற கிராமத்திற்கு தனது பைக்கில் வியாபாரத்திற்கு சென்றார்.

அப்போது, சாலையின் குறுக்கே வந்த கரடி ஒன்று அவரது பைக்கை மறித்து கீழே தள்ளி அவரை கடித்து குதறியது. இதனையடுத்து, அந்த பகுதி வழியாக சென்றவர்கள் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மசாலா வியாபாரியை காப்பாற்ற முயன்ற பெத்தான்பிள்ளை குடியிருப்பத்தை சேர்ந்த சகோதரர்கள் நாகேந்திரன் மற்றும் சைலப்பன் ஆகியோரையும் கரடி கடித்து அட்டகாசம் செய்தது. இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து, அவர்கள் 3 பேரும் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, மசாலா வியாபாரி உள்ளிட்ட 3 பேரை கடித்து குதறிய கரடியை பிடிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரியும் அந்த பகுதி மக்கள் சிவசைலம் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து, 3 பேரை தாக்கிய கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். பெத்தான் பிள்ளை குடியிருப்பு அருகே பதுங்கி இருந்த கரடியை வன ஊழியர்கள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com