போலி பத்திரங்களை பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை சட்டசபையில் மசோதா நிறைவேறியது

போலி பத்திரங்களை பதிவு செய்யும் அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா நேற்று சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது.
போலி பத்திரங்களை பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை சட்டசபையில் மசோதா நிறைவேறியது
Published on

சென்னை,

2021-ம் ஆண்டு பதிவு (தமிழ்நாடு 2-ம் திருத்தம்) சட்டம் என்று அழைக்கப்படும் இந்த சட்டம் உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இந்த சட்டத்தில் 22பி என்ற பிரிவு சேர்க்கப்படுகிறது. அதன்படி, போலி பத்திரங்கள் மற்றும் வேறு ஆவணங்களை பதிவு செய்யும் அலுவலரே மறுக்கலாம்.

இந்த சட்டத்தில் 77ஏ மற்றும் 77பி என்ற பிரிவுகள் சேர்க்கப்படுகின்றன. அதன்படி, போலி பத்திரம் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக பதிவாளர் கருதினால், அந்த பதிவை பதிவாளரே தானாக முன்வந்தோ, அல்லது யாரிடமிருந்து வரப்பெற்ற புகாரின் அடிப்படையிலோ, ஏன் அந்த பத்திர பதிவை ரத்து செய்யக்கூடாது? என்பதற்காக காரணத்தை கேட்டு அறிவிப்பை வெளியிட வேண்டும்.

அந்த பத்திரத்தை எழுதிக்கொடுத்தவர், பத்திரத்தின் அனைத்து தரப்பினர், தொடர்ச்சி ஆவணம் இருந்தால் அதன் தரப்பினர், பத்திரம் ரத்து செய்யப்பட்டால் அதனால் பாதிக்கப்படக்கூடிய தரப்பினர் ஆகியோருக்கு இந்த அறிவிப்பை வழங்க வேண்டும். இந்த அறிவிப்பிற்கான பதிலை பெற்று, அதைக் கருத்தில்கொண்டு பத்திரப்பதிவை ரத்து செய்யலாம். பின்னர் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மற்றும் அட்டவணையில் அந்த பத்திர ரத்து குறித்து பதிவு செய்யலாம்.

மேல்முறையீடு செய்யலாம்

பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டதால் யாருக்காவது இடர் ஏற்பட்டால், பத்திரம் ரத்து செய்யப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் அவர் பதிவுத்துறை தலைவரிடம் மேல்முறையீடு செய்யலாம். பதிவாளரின் ஆணையை உறுதிப்படுத்தும் அல்லது திருத்தும் அல்லது ரத்து செய்யும் உத்தரவை பதிவுத்துறை தலைவர் வழங்கலாம்.

பதிவுத் துறை தலைவரால் வழங்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, அந்த ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் மாநில அரசிடம் மேல்முறையீடு செய்யலாம்.

3 ஆண்டுகள் சிறை

22ஏ மற்றும் 22பி பிரிவுகளுக்கு முரணான (பொய்யான ஆவணங்கள்) போலி பத்திரங்களை பதிவு செய்யும் அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்பட வேண்டும்.

நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட பத்திர பதிவிற்கு இது பொருந்தாது. (நல்லெண்ணம் என்பது, இந்திய தண்டனை சட்டத்தின் 79-ம் பிரிவின்படி, சரியென்று நம்பி நல்லெண்ணத்தில், தவறுதலாக செய்யப்பட்ட அல்லது செய்ததாக கருதப்பட்ட செயல் என்று அர்த்தமாகும்).

நிறுவனம் குற்றம் செய்தால்....

தவறான பத்திரப்பதிவை ஏதாவது நிறுவனம் மேற்கொண்டிருந்தால், அந்த குற்றம் நடந்த நேரத்தில் அந்த நிறுவனத்தை நடத்தி வரும் பொறுப்பில் இருந்தவர்கள் ஒவ்வொருவரும் அந்த குற்றத்தை செய்ததாக கருதப்பட வேண்டும். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஆனால், தனக்கு தெரியாமல் அப்படியொரு குற்றம் நடந்ததாகவோ, அல்லது குற்றம் நடப்பதை தடுக்க தான் முயற்சிகள் மேற்கொண்டதாகவோ கூறி, அதை மெய்ப்பித்தால், அந்த நபரை தண்டனைக்கு உள்ளாக்க தேவையில்லை.

அந்த நிறுவனத்தினால் குற்றம் செய்யப்பட்டு, அதன் இயக்குனர் (கூட்டாளி), மேலாளர், செயலாளர் அல்லது வேறு அலுவலரின் இசைவுடன் அல்லது மறைமுக ஆதரவுடன் அல்லது அவர்களின் கவனக்குறைவால் குற்றம் நடந்ததாக உறுதி செய்யப்பட்டால், அந்த இயக்குனர், மேலாளர், செயலாளர் அல்லது வேறு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

மோசடியை தடுக்கலாம்

இந்த சட்டம் ஏன் கொண்டு வரப்படுகிறது? என்றால், பத்திரங்களின் மோசடி பதிவுகளை தடுப்பதற்கு அரசு முயற்சிகள் எடுத்தாலும், சிலர் பொய்யான விற்பனை பத்திரங்கள் மூலம் உண்மை நில உரிமையாளர்களுக்கு மிகுந்த துன்பத்தை விளைவிக்கின்றனர். இதனால் அந்த சொத்தின் மீது வில்லங்கம் ஏற்படுகிறது.

மேலும், அசையா சொத்துகள் பதிவில் மோசடி, பொய் ஆவணங்கள், வில்லங்க சான்றிதழ், வருவாய் ஆவணங்கள் ஆகியவற்றை சரிபார்த்தல் போன்றவை தொடர்பாக பல சுற்றறிக்கைகளை பதிவுத்துறை தலைவர் வழங்கியுள்ளார். இப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தபோதிலும் பொய்யான பத்திர பதிவு தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே அதை ரத்து செய்யும்படி அரசை பாதிக்கப்பட்டவர்கள் அணுகுகின்றனர்.

ஒருமுறை பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை மோசடி, ஆள்மாறாட்டம் போன்ற காரணங்கள் இருந்தாலும் அந்த பதிவை ரத்து செய்ய பதிவு செய்த அலுவலர்களுக்கு அதிகாரம் இல்லாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே பதிவு செய்ய விரும்பும் மக்களின் துன்பத்தை தணிப்பதற்காக இந்த சட்டமசோதா கொண்டு வரப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டமசோதா, சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்ட நேற்றே ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com